MK Stalin Health: அடுத்த 3 நாட்கள்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் மு.க. ஸ்டாலின் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலன், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 3 நாட்கள் அங்கேயே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர்
இன்று காலை, அதிமுக முன்னாள் எம்.பி அன்வர்ராஜா அந்த கட்சியில் இருந்து விலகி, அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
அப்போது அவரை வரவேற்ற முதலமைச்சரின் வீடியோ வெளியான நிலையில், திடீரென அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது. ஆரம்பத்தில், தொடர் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதால், அவர் உடல்நலன் குறித்த பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் முடிந்த உடன் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் இருந்ததாகவும், அதனால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நாளை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சிக்கு அவர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ஏற்கனவே திட்டமிட்டபடி திருப்பூருக்கு அவர் செல்வாரா அல்லது மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஓரிரு நாட்கள் ஓய்வில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இரவில் மருத்துவமனை அறிக்கை
இந்த நிலையில், முதலமைச்சரின் உடல் நிலை குறித்து, இரவில் அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தது.
மேலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி வேறுசில பரிசோதனைகளை செய்ய பரிந்துரைத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தவாறே, உத்தியோகப்பூர்வ கடமைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.





















