Metro Travel Card: மெட்ரோ ரயில் பயணிகளே, ஆகஸ்ட் 1-ல் இருந்து அந்த கார்டு இருந்தா தான்... CMRL-ன் முக்கிய அறிவிப்பு
சென்னையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோருக்கு, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் NCMC அட்டை கட்டாயம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில், மெட்ரோ ரயில் நிலையங்களில், சிஎம்ஆர்எல் பயண அட்டை(Travel Card) பயன்பாட்டிலிருந்து, தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு(NCMC - சிங்கார சென்னை அட்டை) மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து, அந்த நடைமுறை முழுமையாக அமைல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிர்வாகத்தின் அறிவிப்பு என்ன.?
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் பயணிக்க, சிஎம்ஆர்எல் பயண அட்டையுடன் கூடுதலாக, கடந்த 2023 ஏப்ரல் 14-ம் தேதியன்று, தேசிய பொது போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தேசிய பொது போக்குவரத்து அட்டை, அதாவது சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், சிஎம்ஆர்எல் அட்டையை ரீசார்ஜ் செய்வது நிறுத்தப்பட உள்ளது. மற்றபடி, QR பயணச் சீட்டுகள், பிற பயணச் சீட்டுகளை வழக்கம்போல் பெறலாம்.
“பழைய அட்டையை ஒப்படைத்து புதிய அட்டை பெறலாம்“
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள், ஏற்கனவே, தங்களது சிஎம்ஆர்எல் பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை, மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அந்த அட்டையின் இருப்புத் தொகை 50 ரூபாய்க்கும் குறைவாக வரும்போது, அதை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச் சீட்டு கவுண்ட்டர்களில் ஒப்படைத்துவிட்டு, அதற்கு பதிலாக, தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பழைய பயண அட்டையின் வைப்புத் தொகை மற்றும் மீதமுள்ள தொகையை, புதிய அட்டைக்கு மாற்றிக் கொண்டு, பயணிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
கடந்த பிப்ரவரி மாதமே, தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாறும்படி, மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளுக்கு அறிவுறுத்தலை கொடுத்தது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் பழைய அட்டையை பயன்படுத்த முடியாது என்றும், அதனை மாற்றி புதிய அட்டையை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், பழைய அட்டையில் ஆயிரத்திற்கு மேலான ரூபாய் வரை ரீசார்ஜ் செய்திருந்த பயணிகள், திடீரென அட்டையை மாற்றச் சொன்னதால் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பணம் திரும்பக் கிடைக்குமா அல்லது புதிய அட்டையில் வரவு வைக்கப்படுமா என்றெல்லாம் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் சரியான பதில் அளிக்கப்படவில்லை.
இதனால், ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதுதான் மிச்சம். இந்நிலையில், தற்போது, பழைய அட்டையில் இருக்கும் மீதிப் பணம், புதிய அட்டைக்கு மாற்றப்படும் எனவும், புதிய அட்டையை கட்டணம் இல்லாமலேயே பெறலாம் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருப்பதால், இந்த முறை பயணிகள் புதிய அட்டைக்கு மாறுவார்கள் என நம்பலாம்.





















