(Source: ECI/ABP News/ABP Majha)
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Gold Rate: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, வரலாற்றில் முதல் முறையாக 58 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
Gold Rate: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, 58 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை புதிய உச்சம்:
இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, 58 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாயை கடப்பது இதுவே முதல்முறையாகும். ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்த்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 60 ஆயிரம் அளவில் கடைகளில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து, அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த நான்கு நாட்களில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1480 ரூபாய் அதிகரித்து உள்ளது.
தொடர்ந்து உயரும் தங்கம் விலை:
தங்கம் என்பது சிலருக்கு ஆடம்பர பொருளாக இருந்தாலும் சிலருக்கு நெருக்கடியான காலத்தில் உதவும் அத்தியாவசிய பொருளாக இருக்கிறது என்பதே உண்மை ஆகும். ஆனால், சமீபமாக சில ஆண்டுகளில் தங்கம் விலை என்பது தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வட்டி விகிதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக உலக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகளவு தங்க நகைகள் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். இதன் காரணமாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க நகைகள் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.