Edappadi Palanisamy: “இந்த கூட்டத்த பார்த்தா ஸ்டாலினுக்கு ஜுரம் வரும்“; அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்-இபிஎஸ் அதிரடி
கோவையில் இன்று தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக-வை கடுமையாக விமர்சித்ததோடு, அதிமுக கூட்டணிக்கு இன்றும் சில கட்சிகள் வரும் என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற தலைப்பிலான தேர்தல் பிரசார பயணத்தை, இன்று கோவை மேட்டுப்பாளையத்தில் அவர் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால், ஸ்டலினுக்கு ஜுரம் வந்துவிடும் என விமர்சித்தார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ பிரசார பயணம் தொடக்கம்
2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், முதற்கட்டமாக இன்று முதல் ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
அந்த சுற்றுப்பயணம், இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது. தேர்தல் பிரசாரத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசுப் பேருந்தில் பயணம் செய்தபடி, எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்கிறார்.
கூட்டணி கட்சிகளும் பங்கேற்பு
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பயண தொடக்க நிகழ்விற்கு, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
“இந்த கூட்டத்தை பார்த்தார் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிடும்“
மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இன்று கூடிய கூட்டத்தை பார்த்தால் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிடும்“ என்று கூறினார்.
இன்றைய திமுக ஆட்சியில், 52 சதவீத மின் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், 100 சதவீதம் வீட்டு வரி உயர்வும், கடைகளுக்கு 150 சதவீத வரி உயர்வும் செய்யப்பட்டள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் அரசில் இருந்தபோது, திமுக எதையும் செய்யவில்லை என்றும், கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, பெண்கள் வெளியில் நடமாட முடியவில்லை என்றும், சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
“2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெரும்“
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெரும் என தெரிவித்த அவர், 2001 சட்டமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்தபோது, அது நல்ல கட்சி, இப்போது நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா என திமுகவிற்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்தியில் 3-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்று, நிலையான கட்சியாக பாஜக உள்ளது என்றும், மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லை, எதுவுமே செய்யவில்லை என்று கீரல் விழுந்த ரெக்கார்டு போல் பேசுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.
16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக மக்களை பற்றி சிந்தித்ததா.? நிதி கொண்டுவந்ததா.? இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
“அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள்“
தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் திமுக-வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று கூறிய அவர், தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த, வாக்குகள் சிதறாமல் இருக்க அமைப்பது என்றும், அதற்காக மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேரப் போகிறார்கள் என்றும், தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டுவருவோம் என்றும் உறுதிபட தெரிவித்தார்.





















