நயன்தாரா ஆவணப்படத்திற்கு மீண்டும் சிக்கல்.. சந்திரமுகி பட சர்ச்சை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை சேர்த்தது மீண்டும் சர்ச்சையாக மாறியுள்ளது.

சமீபகாலமாக நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முன்னணி நடிகையை அவமரியாதையாக பேசியது, மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் உதவி இயக்குநர்களை திட்டியது என அடுத்தடுத்து அவரை சுற்றி கிசுகிசுக்கள் அதிகம் வர தொடங்கியுள்ளன இந்நிலையில், மீண்டும் நயன்தாரா ஆவணப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை காணலாம்.
நானும் ரவுடி தான் பட சிக்கல்
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃளிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு நயன்தாரா தனுஷுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டார்.
நயன்தாராவிற்கு நடிகைகள் ஆதரவு
தனுஷ் 3 நிமிட காட்சிக்கு ரூ.1 கோடியா எனவும் பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், தனுஷ் பக்கமே நியாயம் இருப்பதாகவும் பேசப்பட்டது. அவரது அனுமதி இல்லாமல் இந்த காட்சியை சேர்த்தது தவறு என்று கூறப்பட்டது. இருப்பினும் நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இப்போது தெரிகிறதா தனுஷின் உண்மை முகம் என்றும் விக்னேஷ் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். பின்பு அதை நீக்கினார். இந்த சம்பவத்திற்கு தனுஷூடன் நடித்த நடிகைகள் அனைவரும் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதுதொடர்பான செய்திகளும் அண்மையில் வெளியானது. தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
சந்திரமுகி பட விவகாரம்
இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படம் மீண்டும் காபிரைட்ஸ் விவகாரத்தில் சிக்கி தவிக்கிறது. நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆவணப் படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பியும், இன்னும் அவற்றை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
இந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், ஆவணப்படத்தின் மூலம் ஈட்டிய லாப கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி,
இதுதொடர்பாக இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, டார்க் ஸ்டூடியோவுக்கும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.





















