"இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு டிமாண்ட்" பெருமையாக சொன்ன ராஜ்நாத் சிங்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் உள்நாட்டு தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரித்துள்ளது என ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (ஜூலை 7) நடைபெற்ற பாதுகாப்பு கணக்குத் துறையின் கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் நிதிச் சூழலை வலுப்படுத்துவதில் துறையின் முக்கிய பங்கினை வலியுறுத்தினார்.
"இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு டிமாண்ட்"
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி குறித்து குறிப்பிட்ட அவர், உள்நாட்டு தளவாடங்களின் திறன், உலகளாவிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார். உலக நாடுகள் நமது பாதுகாப்புத் துறையை புதிய மரியாதையுடன் காண்கின்றன என்று தெரிவித்தார்.
நிதி நடைமுறைகளில் ஏற்படும் ஒரு தாமதம் அல்லது பிழை செயல்பாட்டுத் தயார்நிலையை நேரடியாகப் பாதிக்கும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்புத்துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க கட்டுப்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து எளிதாக்குபவர் என்ற நிலையை கடைபிடிக்குமாறும் பாதுகாப்பு கணக்குத் துறைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பெருமையாக சொன்ன ராஜ்நாத் சிங்:
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையே பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றத்திற்கு காரணம் என்று பாராட்டிய ராஜ்நாத் சிங், அவரது வழிகாட்டுதலின் கீழ், நாடு தற்சார்பு இந்தியா மற்றும் பாதுகாப்புத் திட்டமிடல், நிதி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் கட்டமைப்பு சீர்திருத்தத்தை நோக்கி செல்வதாக தெரிவித்தார்.
Raksha Mantri Shri @rajnathsingh, addressing the Controllers’ Conference of the @DefenceAccounts (DAD) in New Delhi today, called DAD a key pillar in #OperationalReadiness, urging a shift from controller to facilitator amid growing #privatesector role. He stressed swift… pic.twitter.com/bpwuIXGwkh
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) July 7, 2025
கடந்த காலத்தில் நாம் இறக்குமதி செய்த பெரும்பாலான தளவாடங்கள் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். பெரிய புவிசார் அரசியல் சூழலை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, 2024-ம் ஆண்டில் உலகளாவிய இராணுவச் செலவு 2.7 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி தொழில்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.




















