Tamil Nadu Govt Advisor : ’முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த முடிவு’ தமிழக அரசின் ஆலோசகர் ஆகிறாரா அசோக் வர்தன் ஷெட்டி..?
’அரசை வழிநடத்த இறையன்பு, உதயசந்திரன் போன்ற திறமையான அதிகாரிகள் ஏற்கனவே பணியில் இருக்கும்போது, ஓய்வு பெற்ற அதிகாரிக்கு முக்கிய பதவி கொடுப்பது நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது’
![Tamil Nadu Govt Advisor : ’முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த முடிவு’ தமிழக அரசின் ஆலோசகர் ஆகிறாரா அசோக் வர்தன் ஷெட்டி..? Former IAS Officer Ashok Vardhan Shetty likely to be appointed as Advisor of Tamilnadu Government Tamil Nadu Govt Advisor : ’முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த முடிவு’ தமிழக அரசின் ஆலோசகர் ஆகிறாரா அசோக் வர்தன் ஷெட்டி..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/20b9f08dfbd0e9164b845763de9c30df_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது முதல் திறமையும் தகுதியும் வாய்ந்த அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு பொறுப்பான பதவிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தலைமைச்செயலாளராக இறையன்பு, முதல்வரின் தனிச்செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், அனு ஜார்ஜ், முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர், வனத்துறை செயலாளராக சுபிரியா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி, வேளாண் துறை செயலராக சமயமூர்த்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், காலியாக உள்ள தமிழக அரசின் ஆலோசகர் என்ற பதவியையும் விரைவில் நிரப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமைச்செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு அவரை தமிழக அரசின் ஆலோசகராக நியமித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிரடி அரசியல் மாற்றங்களை ஏற்காத ஷீலா பாலகிருஷ்ணன் தன்னுடைய ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தலைமைச்செயலாளராக பணியாற்றிய சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடித்த நிலையில் சண்முகமும் தன்னுடைய ஆலோசகர் பதவியை துறந்தார்.
![Tamil Nadu Govt Advisor : ’முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த முடிவு’ தமிழக அரசின் ஆலோசகர் ஆகிறாரா அசோக் வர்தன் ஷெட்டி..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/3b7ef86b90b6397fd0bd86a10fef61fd_original.jpg)
தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு இணையான அதிகாரங்கள் பொருந்திய தமிழக முதல்வரின் / தமிழக அரசின் ஆலோசகர் என்ற இந்த பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டியை நியமிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
![Tamil Nadu Govt Advisor : ’முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த முடிவு’ தமிழக அரசின் ஆலோசகர் ஆகிறாரா அசோக் வர்தன் ஷெட்டி..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/a76e4afc1635b8cdab1303fbce739a97_original.jpg)
கடந்த 2006ஆம் ஆண்டு அமைந்த திமுக அரசில், மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவியில் இருந்தபோது, அந்த துறையின் செயலாளராக மு.க.ஸ்டாலினோடு பணியாற்றி அவரிடம் நற்பெயரை பெற்றவர்தான் இந்த அசோக் வர்தன் ஷெட்டி. பணி ஓய்வுக்கு பிறகு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வந்த அசோக் வர்தன் ஷெட்டி, அதன்பின்னர் கனடா நாட்டிற்கு சென்று குடியேறிவிட்டார்.
இந்நிலையில், அவரது திறமையையும் நேர்மையையும் அறிந்து வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரை தன்னுடைய ஆலோசகராக நியமிக்க முடிவு செய்து, கனடாவில் இருந்து அசோகர் வர்தன் ஷெட்டியை தமிழகத்திற்கு வரும்படி அழைத்திருக்கிறார். முதல்வரின் அழைப்பை ஏற்று தமிழகம் திரும்பியுள்ள அசோக் வர்தன் ஷெட்டி, விரைவில் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மத்திய அரசு பணிக்கு சென்ற மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா மீண்டும் தமிழக அரசு பணிக்கு திரும்பியிருக்கும் நிலையில், அவருக்கு உள்துறை செயலர் போன்ற முக்கியமான பதவி கொடுக்கப்படும் என பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான அசோக் குமார் ஷெட்டியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் வர அழைத்திருப்பதன் மூலம் மக்களுக்கு திறமையான அதிகாரிகளின் வாயிலாக நல்லாட்சியை கொடுக்க மெனக்கெடுகிறார் என்பது தெரியவருகிறது.
![Tamil Nadu Govt Advisor : ’முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த முடிவு’ தமிழக அரசின் ஆலோசகர் ஆகிறாரா அசோக் வர்தன் ஷெட்டி..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/a2fc8146cffc630a2a6fb4ce4cff4156_original.jpg)
இருந்தாலும், ஏற்கனவே அரசை வழிநடத்த இறையன்பு, உதயசந்திரன் போன்ற திறமையான பல அதிகாரிகள் இருக்கும் நிலையில், ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அழைத்து அவர்களுக்கு முக்கியமான, அதிகாரமுள்ள பதவி கொடுப்பது, பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவதுடன், அது நடைமுறையில் சிக்கல்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)