TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் 90 ஆக உயர உள்ளது.

TN Toll Gate: மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை,90 ஆக உயர உள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சியில் தமிழக மக்கள்:
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒப்பந்தம் காலாவதியான பல சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அவ்வப்போது அதிகரிக்கப்படும் கட்டணத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை முட்டுகிறது. இந்நிலையில் தான், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை, 90 ஆக உயர வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம், 963 கிமீ தூரத்திற்கான நான்கு வழிச் சாலைகள், தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை நெட்வொர்க்கில் சேர்க்கப்பட உள்ளது என்பதே ஆகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 20,000 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ரூ.26,000 கோடி வருவாய்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, 2014 மற்றும் 2024 க்கு இடையில் தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 26,000 கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களின் முடிவில் தமிழ்நாட்டில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2,735 கிமீ முதல் 3,698 கிமீ வரை விரிவடையும். மாநிலத்தில் உள்ள மொத்த தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கில் உள்ள 6,805 கி.மீ தூர சாலையில், 1,282 கிமீ இருவழிச் சாலைகள், நடைபாதை தோள்களுடன் கூடிய 2,383 கிமீ நீளமுள்ள இருவழிச் சாலைகள், 384 கிமீ ஆறுவழிச் சாலைகள் மற்றும் 21 கிமீ எட்டு வழிச் சாலைகள் அடங்கும். இதனால், வரும் காலங்களில் சுங்கக் கட்டண வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மும்முரமாக நடைபெறும் பணிகள்:
தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் எட்டு சாலைத் திட்டங்களில், 767 கிமீ நீளமுள்ள ஆறு நான்கு வழித் திட்டப் பணிகள் 50-70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த 12 முதல் 15 மாதங்களுக்குள் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களில் மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை (106 கிமீ), திண்டுக்கல்-பொள்ளாச்சி (131.9 கிமீ), நாகப்பட்டினம்-தஞ்சாவூர் (65 கிமீ), விழுப்புரம்-நாகப்பட்டினம் (125 கிமீ), விக்கிரவாண்டி-தஞ்சாவூர் (163 கிமீ), குடிபாலா - ஸ்ரீபெரும்புதூர் (பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை) (106 கி.மீ.) ஆகியவை அடங்கும். மேலும், திண்டுக்கல்-தேனி-குமுளி (135 கி.மீ.) மற்றும் நெரலூர்-தொரப்பள்ளி அக்ரஹாரம்-ஜிட்டண்டஹள்ளி (60 கி.மீ.) சாலை பணிகள் 20-30% நிறைவடைந்துள்ளன.
புதிய சுங்கச் சாவடிகள் எங்கு அமைகின்றன?
ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் பிரிவு சமீபத்தில் நிறைவடைந்து, தற்போது சத்திரப்பட்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து கமலாபுரம் (திண்டுக்கல்) - ஒட்டன்சத்திரம் மற்றும் மடத்துக்குளம் - பொள்ளாச்சி பகுதி பணிகள் முடிவடையும்போது பாறைப்பட்டி மற்றும் கோமங்கலத்தில் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ளன. இதேபோன்று திட்டப்பணிகள் முடியும்போது, பல்வேறு புதிய சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன. அதன் மூலம் தமிழகத்தில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை, 72-லிருந்து 90 ஆக உயர உள்ளது.
அதிக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்:
தோப்பூர் எல்&டி (கிருஷ்ணகிரி - தும்பிபாடி), கிருஷ்ணகிரி (ஓசூர் - கிருஷ்ணகிரி), விக்கிரவாண்டி (தாம்பரம் - திண்டிவனம்), ஓமலூர் (ஓமலூர் - நாமக்கல்) மற்றும் பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி - வாலாஜாபேட்டை) ஆகியவை தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்யும் ஐந்து சுங்கச்சாவடிகளாக உள்ளன. இதுதொடர்பான தரவுகளின்படி, தோப்பூர் 2014-24ல் அதிகபட்சமாக ரூ.1,945 கோடியும், கிருஷ்ணகிரி ரூ.1,636 கோடியும், விக்கிரவாண்டி ரூ.1,290 கோடியும், ஓமலூர் ரூ.1,040 கோடியும், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி ரூ.1,002 கோடியும் கட்டணமாக வசூலித்துள்ளது.





















