IPL 2025 CSK vs RCB: புதிய பகையாளிகள் ஆர்சிபி vs சிஎஸ்கே! எப்போது மேட்ச்? எங்கு நடக்கிறது?
IPL Schedule RCB vs CSK: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் எப்போது மோதுகின்றன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

IPL Schedule RCB vs CSK: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தலா 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
மும்பை - சென்னை அணிகள் மோதும் போட்டிக்கு நிகராக இந்த இரு அணிகளுடன் ஆர்சிபி அணி மோதும் போட்டிக்கும் ஏராளமான எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, கடந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போகும் அணி யார்? என்பதைத் தீர்மானிக்கும் மே 18 நடந்த போட்டிக்குப் பிறகு சென்னை - பெங்களூர் அணிகள் மோதும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்சிபி - சென்னை மோதல் எப்போது?
கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க வேண்டும் என்று சென்னை ரசிகர்கள் பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் லீக் போட்டியில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி மார்ச் 28ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்பின்பு, லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி வரும் மே 3ம் தேதி பெங்களூரில் நடக்கிறது. இந்த இரு போட்டிகளும் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
பெரும் எதிர்பார்ப்பு:
கடந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிகள் போல சி.எஸ்.கே. - ஆர்சிபி அணிகள் மோதும் போட்டி மாறியுள்ளது. சென்னை அணியை கடந்த சீசன் முதல் ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்தி வருகிறார். பெங்களூர் அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் தூணாக தோனியும், பெங்களூர் அணியின் பலமாக விராட் கோலியும் உள்ளனர்.
சரிசம பலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் ப்ளே ஆஃப் போட்டிகளில் மோதிக்கொள்ள வாய்ப்பு உண்டு.
அணி விவரம்:
சென்னை சூப்பர்கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் ( கேப்டன்), எம்.எஸ்.தோனி, கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆண்ட்ரூ சித்தார்த், ரவீந்திரா, அஸ்வின், விஜய் சங்கர், சாம் கரண், கம்போஜ், தீபக் ஹுடா, ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ், ஜடேஜா, ஷிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் செளத்ரி, குர்ஜப்நித் சிங், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், பதிரானா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ரஜத் படிதார் ( கேப்டன்), விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், சுவஸ்திக் சிகாரா, லிவிங்ஸ்டன், குருணல் பாண்ட்யா, சுவப்னில் சிங், டிம் டேவிட், ரோமாரியோ ஷெப்பர்ட், மனோஜ் பண்டகே, ஜேக்கப் பெத்தேல், ஹேசில்வுட், ரஷிக் தர், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர்குமார், நுவன் துஷாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன், மோகித் ரதி, யஷ்தயாள்


















