வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்
சுனாமியால் பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தனது வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த 2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி எனும் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது. அதில் கடுமையாக சேதமடைந்த மாவட்டங்களில் நாகப்பட்டினமும் ஒன்று. அப்போது, அம்மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன், சுனாமியால் பெற்றோரை இழந்த இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்தார். அவர்களுக்கு சௌமியா மற்றும் மீனா என பெயரிட்டு, காப்பகத்தில் தங்க வைத்து வளர்த்தார்.
அவர்களுக்கான கல்வி போன்ற அனைத்து தேவைகளையும் செய்து கொடுத்தார். இந்நிலையில் வளர்ப்பு மகள், மீனாவிற்கு நேற்று ராதாகிருஷ்ணன் தலைமையில் தடபுடலாக திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தனது வளர்ப்பு மகளின் திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். அதில் “நாகப்பட்டினத்தில் ஒரு மனதைக் கவரும் சந்திப்பு. இன்று நாகப்பட்டினத்தில் மீனா & மணிமாறன் திருமணத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. நாகை மாவட்ட பிள்ளைகளுடன் சுனாமிக்குப் பிந்தைய எங்களின் பயணம் எப்பொழுதும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. அதற்கு உதாரணமாக இருப்பவர்கள் தான் மீனா மற்றும் சௌமியா. கொண்டாட்டங்களுக்கு மத்தியில், காலம் எவ்வாறு பறந்தது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் வளர்ந்து, படித்து, பட்டம் பெற்று, இப்போது அழகான வாழ்க்கையில் குடியேறுவதைப் பார்க்கும்போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது. நினைவில் கொள்ள வேண்டிய நாள், இரத்த பந்தங்களுக்கு அப்பால் வளர்ந்த குடும்பம். குறைபாடற்ற ஏற்பாடுகளை செய்த யாழிசை திருமண மண்டபம் மற்றும் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி.
நாம் அனைவரும் எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்பதை நினைவூட்டும் இன்றைய காட்சிகள் மற்றும் கடந்த காலத்தின் தருணங்களைப் பகிர்கிறேன்” என கூறியுள்ளார்.





















