Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Tiruvallur Multi Modal Logistics Park: திருவள்ளூர் மாவட்டத்தில் அமையும் தமிழ்நாட்டின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடபெற்று வருகின்றன.

Tiruvallur Multi Modal Logistics Park: திருவள்ளூர் மாவட்டத்தில் அமையும் தமிழ்நாட்டின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவால் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு எனும் பகுதியில், தமிழ்நாட்டின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் எனப்படும் பல்வகை தளவாடப் பூங்கா அமைக்கப்படுகிறது. ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் நிறைந்த, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகளுக்கு அருகே இந்த புதிய பூங்கா அமைவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டமானது சென்னை துறைமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான, 181 ஏக்கர் நிலத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. பொது தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் நிறுவப்படும் இந்தப் பூங்கா, லாஜிஸ்டிக்ஸ் செலவைக் குறைப்பதன் மூலம் தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவை உலகளவில் போட்டித்தன்மையுடன் மாற உதவும் என கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் இணைப்பு வசதிகள்:
இந்த திட்டமானது ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட நிறுவனம் கட்டுமான பணிகளை முடித்து, குறிப்பிட்ட காலத்திற்கு பூங்காவை நடத்தும். ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் ஒட்டுமொத்த பூங்காவும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். முதற்கட்டமாக அங்கு மேற்கொள்ளப்பட உள்ள சாலை இணைப்பு பணிகள், 2 வருடங்களில் முடிவடைய உள்ளன. ஏற்கனவே அங்குள்ள மாநில நெடுஞ்சாலையின் கீழ் வரும் 4 வழிப்பாதையானது, மேம்பாலம் உட்பட சில மேம்பாடுகளைப் பெறும். மேலும் சென்னை அவுட்டர் ரிங் சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. சாலை இணைப்பு மட்டுமின்றி, பூங்காவிற்கு ரயில் இணைப்பும் கிடைக்கும். அதன்படி, கடம்பத்தூர் ரயில் நிலையத்துடன் இணைக்க 10 கி.மீ நீள ரயில் பாதை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன. இந்த ரயில் இணைப்புப் பணிகள் முடிவடைய குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும்.
பூங்காவின் கட்டமைப்பு வசதிகள்:
மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவானது எந்தவித கட்டமைப்புகளும் இல்லாத, முற்றிலும் திறந்தவெளி, வறண்ட நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட உள்ள இந்தப் பூங்கா, சீரான இடைநிலை சரக்கு போக்குவரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தானியங்கி கிடங்குகள், குளிர்பதன சேமிப்பு மற்றும் சுங்க வசதிகள், சரக்கு முனையங்கள் மற்றும் லாரி முனையங்கள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும்.
ஜவுளி, ஆடைகள், தானியங்கள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தளவாடப் பூங்காவில் கையாளலாம். 45 ஆண்டுகளில், இந்த பூங்காவானது 7.17 மில்லியன் டன் சரக்கு அளவை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து செலவு குறையும்
லாஜிஸ்டிக்ஸ் பூங்கா திட்டம், உள் கிடங்கு, குளிர்பதன சேமிப்பு மற்றும் சுங்க அனுமதி வசதிகள் மூலம் செயல்பாட்டு தாமதங்களைக் குறைப்பதன் மூலம் சரக்கு இயக்கத்தின் செலவைக் குறைக்க முயல்கிறது. துறைமுகங்கள் மற்றும் பிற முக்கிய போக்குவரத்து இடங்களுடன் நேரடி சாலை மற்றும் ரயில் இணைப்பு மூலம், சரக்குகளின் இயக்கத்தில் உள்ள தடைகள் சமாளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவானது எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களைத் தவிர, சென்னை விமான நிலையம் மற்றும் கடல் துறைமுகத்துடன் இணைக்கும் CPRR (சென்னை புற சாலை திட்டம்)க்கும் அருகில் அமைந்துள்ளதால் சரக்கு போக்குவரத்து செலவும் வெகுவாக குறையும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

