Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
குஜராத் உள்ளிட்ட பல்வேறு புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தி வரும் மாநிலங்களில் நான்கு ஆண்டு படிப்புடன் சேர்த்து கையேடு வெளியிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக தரப்பில் விளக்கம்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்றைய முன்தினம் பி.எச்டி படிப்பிற்கான கையேடு வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் படி கையேடு வெளியிடப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது. முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டனத்தில், "பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான அடிப்படை கல்வித் தகுதி என தமிழ்நாட்டில் இதுவரையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை என்ற தகுதி நிர்ணயமே நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இளநிலை பட்டப்படிப்பு 4 ஆண்டுகள் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதனால் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட முனைவர் பட்ட படிப்பிற்கான கல்வி தகுதியில் புதிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் என்று புதியதாக மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஒன்றிய அரசின் கல்வி கொள்கையை மறைமுகமாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியாகும்.
தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு அனுமதி அளிக்கபடாமலும், புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில் பெரியார் பல்கலை கழக நிர்வாகம் மட்டும் யூ.சி.ஜி யின் அறிவிப்பை சுட்டிக்காட்டி முனைவர் பட்டத்திற்கான கல்வி தகுதியை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
என்ன காரணம்?
முறைகேடு வழக்கு மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில் இவற்றை திசை திருப்பிடும் வகையில் வேறு எந்த பல்கலை கழகமும் இது போன்ற அறிவிப்பு வெளியிடாத போது பெரியார் பல்கலை கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இது நடைமுறைப்படுத்த பட்டால் தமிழக மாணவர்கள் முனைவர் பட்டம் பெற 17 ஆண்டுகள் கல்வி தகுதி என்பதும் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டுள்ள வட மாநில மாணவர்கள் முனைவர் பட்டம் பெற 16 ஆண்டுகள் கல்வி தகுதி போதும் என்ற நிலை உருவாகும். இதனால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு குறையும்.
இதுமட்டுமல்லாமல் இளங்கலை மற்றும் முதுநிலையில் ஒரு பாடம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் நிலை மாறி, பெயளரவிற்கு இளங்கலையில் மட்டும் பயின்றால் போதும் என்ற நிலை உருவாகும். இதனால் ஆராய்ச்சி படிப்பு என்பது முழுமையான படிப்பாக இருக்காது. எனவே இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்து அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக செயல்படும் துணை வேந்தர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்வியில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கும் பெரியார் பல்கலைக்கழக அறிவிப்பு ஆணையை திரும்பப் பெற்று பழையபடியே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழக அரசையும் உயர் கல்வித் துறையும் இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்ட குழு வலியுறுத்திக்கிறது" என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து திராவிடர் விடுதலை கழகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, "நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கையேடு பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்துதான் வெளியிடப்பட்டது. முனைவர் படிப்பிற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, இளநிலை படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படி கல்வித் தகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பட்டப்படிப்பில் நான்கு ஆண்டுகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி உள்ளதாகவும் பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அந்த கையேட்டில் தமிழகத்தில் உள்ள கல்விக் கொள்கையான மூன்று ஆண்டும், குஜராத் உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தி வரும் பல்வேறு மாநிலங்களில் நான்கு ஆண்டு படிப்பும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இது வெளிமாநிலங்களில் படித்து வரக்கூடிய மாணவர்களின் நலனுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டது’’ என்று கூறினர்.




















