TRB: ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த அறிவிப்பு; 232 பணியிடங்கள்- என்ன தேர்வு? எப்போது? விவரம்!
TRB Anna University exam 2025: உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி) பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற 2025 ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர்களாகப் பணியாற்ற தேர்வு நடத்தப்படுவதாகவும் அதற்கான தேதிகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளி, கல்லூரிகளில் பேராசிரியர்களாகப் பணியாற்ற, தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு என்று இந்தத் தேர்வு அழைக்கப்படுகிறது. பிற தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
’’அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் பாடங்களுக்கான 232 உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி) பணியிடங்களுக்கான அறிவிக்கை எண் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டது. இணையவழி வாயிலாக இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இத்தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.
தேர்வு எப்போது?
எனவே உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர் (உடற் கல்வி) பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற 2025 ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் அதாவது https://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாகப் பதிவேற்றம் செய்யப்படும். அதனை பதிவிறக்கம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
மேற்படி நுழைவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்பட மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/

