மூச்சுத் திணறல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
DMDK Leader Vijayakanth Health News: மூச்சுத் திணறல் காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறல் காரணமாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று, அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்கு பின் முழு விபரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனை சென்றுள்ளார்; ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு விஜயகாந்த் தெரிவித்தார். மேலும், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அரசியல் வாழ்க்கை:
தமிழக மக்களால் அன்போடு 'கேப்டன்' என்று அழைக்கப்படும் விஜயகாந்த், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.
2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது.
2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
கடந்த சில வருடங்களாகவே, மோசமான உடல்நிலையால் விஜயகாந்த் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். தேமுதிக கட்சியின் பிரதான நம்பிக்கைப் பொருந்திய வேட்பாளாரான இவர், உடல்நிலையை கருத்தில் கொண்டு நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மேலும், கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். கூட்டத்தில் எதுவும் பேசாமல், முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் .
கடந்தாண்டு கொரோனா தொற்று: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயகாந்த் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குள் குணமடைந்து வீடு திரும்பினார். விஜயகாந்த் லேசான அறிகுரியற்ற நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்தாண்டு ஏற்பட்ட முதல் அலையின் போது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரவித்ததை அடுத்து, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.