Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது, அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையேயான மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், ஒருவர் செய்யும் செயலை மற்றொருவர் விமர்சிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அன்புமணி கூட்ட இருக்கும்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ராமதாஸ் வழக்கு - மனுவில் கூறியிருப்பது என்ன.?
அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக, ராமதாசால் நியமிக்கப்பட்ட பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தன்னைத்தானே தலைவர் என்று சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி கட்சியின் விதிகளுக்கு முரணாக அன்புமணி கூட்டும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம், கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம், கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்ப்டடு, கடந்த மே மாதம் 30-ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டுவருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“அனைத்து அதிகாரமும் கட்சியின் நிறுவனருக்கே உள்ளது“
மாநில தலைவரின் பதவிக் காலம் முடிவடைந்தால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு ஆகியவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது எனவும், கடந்த ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட, கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளதாகவும், செயல் தலைவர் அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அன்புமணி அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு“
அதோடு, கட்சித் தலைவரும், நிறுவனருமான ராமதாஸின் அனுமதி இல்லாமல், அன்புமணி 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு எதிராக டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளதாகவும், அவரது இந்த அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும்“
மேலும், பொறுப்பில் இல்லாத நபர்கள், விதிகளின்படி கட்சிப் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை என்பதால், தற்போது அறிவிக்கப்பட்டுள் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















