US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US India Tariff: இந்தியாவின் எந்தெந்த பொருட்களின் மீது அமெரிக்கா அதிகப்படியான வரியை விதித்துள்ளது என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

US India Tariff: இந்தியாவின் எந்தெந்த பொருட்களின் மீது அமெரிக்கா அதிகப்படியான வரியை விதித்துள்ளது என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
50% வரி விதித்த அமெரிக்கா
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதித்து அமெரிக்க அதிபட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பால், தோல், ரசாயனங்கள், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், ஜவுளி மற்றும் இறால் போன்ற உள்நாட்டு ஏற்றுமதித் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. மேலும், அந்நாட்டிற்கான உள்நாட்டு பொருட்களின் ஏற்றுமதியை 40 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்கும் என்றும் துறைசார் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?
அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- கரிம வேதிப்பொருட்கள் - 54 சதவிகித வரி
- கம்பளங்கள் - 52.9 சதவிகித வரி
- பின்னப்பட்ட ஆடைகள் - 63.9 சதவிகித வரி
- நெய்த ஆடைகள் - 60.3 சதவிகித வரி
- ஜவுளி, அலங்காரப் பொருட்கள் - 59 சதவிகித வரி
- வைரங்கள், தங்கம் மற்றும் பொருட்கள் - 52.1 சதவிகித வரி
- இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் - 51.3 சதவிகித வரி
- ஃபர்னீட்சர், படுக்கை, மெத்தைகள் - 52.3 சதவிகித வரி
புதிய வரி எப்போது அமல்?
இந்திய பொருட்களின் மீது கடந்த ஜுலை 31 அன்று அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி ஆனது, இன்று காலை 9.30 மணி முதல் அமலுக்கு வரும். தொடர்ந்து கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவிகித வரியானது ஆகஸ்ட் 27 முதல் செயல்படுத்தப்படும். இவை அமெரிக்காவில் தற்போதுள்ள நிலையான இறக்குமதி வரியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த துறையில் அதிக வணிகம்:
கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்த இருதரப்பு வர்த்தகத்தின் மாதிப்பு 131.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், இதில் இந்தியா 86.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், அமெரிக்கா வெறும் 45.3 பில்லியன் டாலர்களுக்கு நிகராகவே இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
50 சதவிகித வரி சுமையை ஏற்கும் துறைகளில் ஜவுளி/ஆடை பிரிவு10.3 பில்லியன், ரத்தினங்கள் மற்றும் நகைகள் 12 பில்லியன், இறால் 2.24 பில்லியன் அமெரிக்க டாலர், தோல் மற்றும் காலணிகள் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர், ரசாயனங்கள் 2.34 பில்லியன் மற்றும் மின் மற்றும் இயந்திர இயந்திரங்கள் சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கடந்த நிதியாண்டில் வணிகம் நடைபெற்றது குறிப்பிடத்தகக்து.
ஒருதலைபட்சம்:
ரஷ்யாவுடனான உறவுக்காக இந்தியாவிற்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. அதே நேரத்தில் சீனா மற்றும் துருக்கி போன்ற ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் பிற நாடுகளுக்கு அத்தகைய வரி எதையும் அமெரிக்கா விதிக்கவில்லை. எனவே, இதனை கண்டித்துள்ள வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என விமர்சித்துள்ளது.





















