Dharmapuri bus accident: தருமபுரி அருகே அரசு பேருந்து மீது லாரி மோதல்; ஓட்டுநரின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து:
தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து, நேற்று மாலை அரசு பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது பாப்பிரெட்டிப்பட்டி ஆலாபுரம் ஏரி அருகே வந்த போது, டேனஸ்பேட்டையிலிருந்து சிமெண்ட் கற்கள் ஏற்றி கொண்டு எதிரே வந்த லாரியானது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. மேலும் 20 டன் எடைக்கு மேல் பாரம் இருந்ததால், மோதிய வேகத்தில் சுமார் 30 அடி தூரத்திற்கு பேருந்தை தள்ளி சென்றது. இதில் அரசு பேருந்து முழுவதும் உருக்குலைந்து, எலும்புக் கூடானது.
20-க்கும் மேற்பட்டோர் காயம்:
இந்த விபத்தில், அரசு பேருந்தை ஓட்டி வந்த பொம்மிடியை சேர்ந்த ஓட்டுநர் மாது ராஜ்,56 , மெணசியை சேர்ந்த நடத்துனர் சேது, லாரி ஓட்டுநர் செந்தில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் லாரி ஓட்டுநர் செந்தில் லாரிக்குள் சிக்கி கொண்டார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் லாரியில் சிக்கி கொண்ட செந்திலை போராடி மீட்டு வெளியில் எடுத்தனர். இதில் செந்தில் படுகாயமடைந்தார். மேலும் பேருந்து முழுவதும் நெருங்கியதும் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டுநரின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு:
இந்த விபத்தில் படுகாயமடைந்து சுய நினைவில்லாமல் இருந்த லாரி ஓட்டுநர் செந்திலை மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலருக்கு லேசான காயம் என்பதால், சிகிக்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் காயமடைந்த மாதுராஜ், நடத்துனர் சேது, 6 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர்களை சேலம் மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதை கண்ட பேருந்து ஓட்டுநர், பயணிகளை பேருந்துக்குள் படுத்துக் கொள்ளுங்கள் என சத்தமிட்டுள்ளார். இதனால் விபத்தில் பேராபத்துகள் ஏற்படவில்லை என காயமடைந்த பயணிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்த விசாரனை விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்