ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
ADGP Jayaraman: சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஏடிஜிபி ஜெயராமன் சிக்கியதில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்கிங் பங்களிப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ADGP Jayaraman: சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஏடிஜிபி ஜெயராமன் தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி:
திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப் பஞ்சாயத்து விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில், ஏடிஜிபி ஜெயராமன் கைதாகியுள்ளார். தொடர்ந்து, காவல்துறையின் பரிந்துரையின்பேரில் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், தன் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரிய ஜெயராமன் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள ஏடிஜிபியே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. இதனிடையே, தன்னை விட உயர்பொறுப்பில் உள்ள ஒருவர் தவறு செய்வதை அறிந்ததும், எந்தவித தயக்கமும் இன்றி அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
கைது செய்யப்பட்டது ஏன்?
வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த புரட்சி பாரதம் கட்சி தலைவரான ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையின் போது, “புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கடத்தலில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனின் காரில் திரும்பக் கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும்” காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. உரிய ஆதரங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையின் முடிவில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
சம்பவம் செய்த அஸ்ரா கார்க்:
திருவள்ளூர் மாவட்டத்தில் தான் கடத்தல் தொடர்பான ஒட்டுமொத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது வடக்கு மண்டல ஐஜியான அஸ்ரா கார்கின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியாகும். அங்கு வந்து ஜெயராமன் கட்டப்பஞ்சாயத்து செய்ததோடு, கடத்தலுக்கு காவல்துறை வாகனத்தையே பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜெயராமன் மீது கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்து, துறையில் மோசமான பெயரை கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நுழைந்து குற்றச்செயலில் ஈடுபட்டதை அறிந்தது, சற்றும் தயங்காமல் ஒட்டுமொத்த ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என அனைத்து தகவல்களும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அதன்படியே தற்போது ஜெயராமன் கைது செய்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விவரம் என்ன?
காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர், தேனியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனை விரும்பாத பெண்ணின் தந்தை வனராஜா, திருமணத்தை முறித்து தனது மகளை மீட்க முடிவு செய்துள்ளார். இதற்காக காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் மகேஷ்வரி என்பவரை அணுகியுள்ளார். அவர் ஏடிஜிபி ஜெயராமனை அணுக அவர் ஜெகன் மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார்.
எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் திருமணம் செய்த இளைஞனை தேடி அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவர் இல்லாத நிலையில் 16 வயதான அவரது சகோதரனை கடத்திச் சென்றுள்ளனர். தாயார் போலீசாரை அணுகிய வேலையில், சிறுவன் விடுவிக்கப்பட்டுள்ளான். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபியின் காரில் இருந்து வெளியே வந்துள்ளான். பணியிலிருந்த காவலர் ஒருவர் ஓட்டிக்கொண்டிருந்த அந்த வாகனத்தில் மகேஷ்வரி மற்றும் வனராஜா ஆகியோரும் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் பெரும் பணம் கைமாறி உள்ளதாகவும்” காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.






















