Babri Masjid: பாபர் மசூதி இடிப்பு தினம்: விழுப்புரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம்!
பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி விழுப்புரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனை
பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிர சோதனை.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான விழுப்புரம் ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள், ரயில் தண்டவாளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வெடிகுண்டுகளை கண்டறிய உதவும் கருவிகளைக் கொண்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ராமர் கோயில் கட்டப்படும் இடத்திலும் அதிக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி. விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் (கர சேவகர்கள்) கலந்து கொண்டனர். பேரணி பின்னர் வன்முறையாக மாறியது மற்றும் கும்பல் அந்த பகுதியின் பாதுகாப்பை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, 16ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை இடித்தது.
டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாஜகவின் ராம ஜென்மபூமி இயக்கத்தின் கீழ் அணிதிரட்டப்பட்ட 'கரசேவகர்களால்' பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ஒரு பழமையான ராமர் கோயில் இருந்ததாக 'கர சேவகர்கள்' கூறினர். அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தர பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையை கலைத்தார். பின்னர், இந்த இடிப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில், 68 பேர் தான் இதற்குக்காரணம் என்று கண்டறியப்பட்டது. இதில் பல பாஜக மற்றும் தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தை ராம் லல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி மற்றும் பல தலைவர்கள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதை அடுத்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30, 2020 அன்று, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது. செய்தித்தாளில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களை ஆதாரமாக நம்ப வழக்கின் நீதிபதி மறுத்துவிட்டார்.