
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
விழுப்புரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தினால் ஆன 4 பொம்மைகள் சிக்கின. 12 பேரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் : விழுப்புரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தினால் ஆன 4 பொம்மைகள் சிக்கின. அவற்றை பேரம் பேசி விற்பனை செய்ய முயன்ற 12 பேரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானை தந்தத்தினால் செய்யப்பட்ட பொம்மைகள்
யானை தந்தத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளை ஒரு கும்பல் காரில் கடத்திக்கொண்டு வந்து விழுப்புரம் நகரில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து விற்பனை செய்வதாக தமிழ்நாடு வனம் மற்றும் சென்னை மண்டல வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2.30 மணியளவில் ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
உடனே அங்குள்ள அதிகாரிகள், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் அறிவுரையின்பேரில் விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன், வனவர் சுகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர், அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றனர்.
யானை தந்தத்தை கொண்டு செய்யப்பட்ட 4 பொம்மைகள் சிக்கின
அப்போது அந்த விடுதியின் முன்பு ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அதில் 5 பேர், சாக்கு மூட்டைகளுடன் இருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை வனத்துறையினர் மடக்கிப்பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் அதனுள் 4 யானை பொம்மைகள் இருந்தன.
அவற்றை கைப்பற்றி பார்த்ததில் அந்த 4 பொம்மைகளுமே யானை தந்தத்தை கொண்டு செய்யப்பட்டவை என்றும் இந்த பொம்மைகள் தஞ்சாவூர் பகுதியில் தயார் செய்யப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பொம்மைகள் என தெரிந்தது. மேலும் அந்த தங்கும் விடுதியின் அறையில் இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரையும் வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். பிடிபட்ட 12 பேரையும், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
12 பேரிடம் விசாரணை
விசாரணையில் அவர்கள் 12 பேரும் தஞ்சாவூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் காரில் வந்த 5 பேர், திருச்சி பகுதியில் இருந்து யானை தந்தத்தினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகளை காரில் கடத்திக்கொண்டு விழுப்புரம் வந்துள்ளனர்.
இவர்கள், அந்த 4 பொம்மைகளையும் விற்பனை செய்வதற்காக 7 பேரிடம் பேரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து விற்பதற்காக அவர்களை தங்கும் விடுதிக்கு வரவழைத்துள்ளனர். அதன்பேரில் அவர்கள் 7 பேரும் 3 மோட்டார் சைக்கிள்களில் விழுப்புரம் வந்து அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்களிடம் காரில் வந்த 5 பேரும், யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை விற்பனை செய்ய முயன்றபோது வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 4 பொம்மைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும்!
இதையடுத்து அவர்கள் 12 பேர் மீதும் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 4 யானை பொம்மைகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 4 பொம்மைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே விழுப்புரம் தாசில்தார் கனிமொழி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், வனச்சரக அலுவலகத்திற்கு நேரில் சென்று பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தந்தத்தினால் தயார் செய்யப்பட்ட பழமையான பொம்மைகளை விழுப்புரத்திற்கு கடத்திக்கொண்டு வந்து விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி கிடைத்தது?
காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை, திருச்சியில் இருந்து கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அவர்களுக்கு இந்த யானை பொம்மைகள் எப்படி கிடைத்தது? யார் கொடுத்தது என்ற விவரம் சரிவர தெரியவில்லை. பலரிடம் கைமாற்றம் செய்யப்பட்டு அந்த 5 பேரின் கையில் கிடைத்துள்ளது. அவர்கள், அந்த பொம்மைகளை விற்பதற்கு 7 பேரிடம் பேரம் பேசி விற்பனை செய்வதற்காக விழுப்புரத்துக்கு காரில் கடத்திக்கொண்டு வந்தபோது வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
யாரேனும் வனப்பகுதியில் யானையை வேட்டையாடிவிட்டு அதன் மூலம் கிடைத்த தந்தங்களை கொண்டு பொம்மைகளை தயார் செய்து இதுபோன்று பல்வேறு இடங்களில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்களா? என்றும் இதன் பின்னணியில் வேறு யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

