Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
Maruti Suzuki Budget Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் சார்பில் 6 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் 3 கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Maruti Suzuki Budget Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் சார்பில் 6 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் 3 கார் மாடல்களும் மைலேஜில் அசத்துகின்றன.
பட்ஜெட்டில் மிரட்டும் மாருதி கார்கள்:
சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது இன்றைய நடுத்தர குடும்பங்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. அப்படி கார் வாங்கும்போது மைலேஜ் என்பது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. மாணவர்களோ, தினசரி அலுவலகம் செல்லும் நபரோ அல்லது சிறிய முதலாளியோ, பெரும்பாலான நபர்களுக்கு காரின் எரிபொருள் செயல்திறன் என்பது அவசியமானதாகும். காரணம் எரிபொருள் செலவும் உங்களது மாதந்திர பட்ஜெட்டை எகிரச் செய்யலாம். இப்படியான இக்கட்டான சூழலில் தான், சொந்த கார் என்ற கனவை நிறைவேற்றுவதற்கு ஏற்ற போர்ட்ஃபோலியோவை கொண்ட முதன்மையான நிறுவனமாக மாருதி சுசூகி நிறுவனம் விளங்குகிறது. அதன்படி, இந்நிறுவனம் சார்பில் ரூ.6 லட்சம் பட்ஜெட் என்ற குறைந்த விலையில், நல்ல எரிபொருள் செயல் திறனுடன் விற்பனை செய்யப்படும் 3 கார்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
1. மாருதி ஆல்டோ கே10
தற்போதைய இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக்காகவும், நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற காராகவும் ஆல்டோ கே10 திகழ்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ள இந்த காரானது லிட்டருக்கு 24.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம், சிஎன்ஜி எடிஷனில் ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக 33.8 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் அளவில் எளிய பராமரிப்பில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரப்பகுதிகளில் கையாள்வதற்கும் ஏற்றதாகவும் உள்ளது. மொத்தத்தில் முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கும், சிறிய குடும்பங்கள் பயணிக்கவும் ஆல்டோ கே10 சிறந்த தேர்வாக இருக்கும்.
8 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.4.96 லட்சத்தில் தொடங்கி ரூ.7.27 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. மேலும், மாருதி சுசூகி எஸ்பிரெஸ்ஸோ, க்விட் மற்றும் டியாகோ ஆகிய கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
2. மாருதி செலேரியோ
எரிபொருள் செயல்திறனுக்காகவே ஒரு காரை வாங்க வேண்டும் என விரும்பினால், அதற்கான பட்டியலில் மாருதியின் செலேரியோ நிச்சயம் இடம்பெறும். நடப்பாண்டில் சில அப்கிரேட்களுடன் இந்த கார் மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, இதன் பெட்ரோல் வேரியண்ட் அதிகபட்சமாக லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜ் அளிப்பதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் டூயல் ஜெட் இன்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு வேரியண்ட்களிலும் ஜெர்க் இல்லாத செயல்திறனை வெளிப்படுத்துகிறது. விசாலமான உட்புறம், கவனத்தை ஈர்கக்கூடிய வடிவமைப்பு, கையாள்வதற்கு மலிவான எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றால் தினசரி பயன்பாட்டிற்கு சரியான தேர்வாக உள்ளது. கூடுதல் மைலேஜிற்கான சிஎன்ஜி எடிஷனும் உள்ளது. அதில் கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
உள்நாட்டு சந்தையில் 8 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.5.36 லட்சத்தில் தொடங்கி ரூ.7.04 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. மேலும், வேகன் ஆர், இக்னிஸ், டியாகோ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் க்விட் ஆகிய கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
3. மாருதி வேகன் ஆர்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மாருதியின் மூன்றாவது காராக வேகன் ஆர் திகழ்கிறது. இது பல ஆண்டுகளாக குடும்பமாக பயணிக்க ஏற்ற மாடலாக திகழ்கிறது. இதன் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எண்ட்ரி லெவல் வேரியண்ட்களின் விலை ரூ.6 லட்சத்திற்கும் (எக்ஸ் - ஷோரூம்) குறைவாகவே உள்ளது. இதில் உள்ள 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது வேகன் ஆரை, நாட்டின் மிகவும் எரிபொருள் செயல்திறன் மிக்க காராக மாற்றுகிறது. அதன்படி, பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டரும், சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.05 கிலோ மீட்டர் மைலேஜும் அளிக்கிறது. போதுமான உட்புற இடவசதி, அதிகப்படியான பூட் வசதி உள்ளிட்டவை, நகர்ப்புற பயன்பாட்டிற்கும், அவ்வப்போது நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கும் வேகன் ஆர் காரை சிறந்த தேர்வாக மாற்றுகிறது.
உள்நாட்டு சந்தையில் 11 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.6.86 லட்சத்தில் தொடங்கி ரூ.9.02 லட்சம் வரை நீள்கிறது. செலேரியோ, டியாகோ, கிராண்ட் ஐ10 நியோஸ், க்விட், இக்னிஸ் மற்றும் ஆல்டோ கே10 ஆகிய கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.





















