ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வீடுகளுக்கே தேடிச்சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய்களை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்:
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்கள் இருந்து வரும் நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் அது இடம்பிடித்தது. இந்த நிலையில், ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு விநியோகிக்கும் சோதனை முயற்சி இந்த மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. அந்த சோதனை முயற்சியில் சில சவால்கள் இருந்தாலும் இந்த முயற்சி வெற்றி பெற்றது.
எப்போது முதல்?

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்பட்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
எப்படி கொடுப்பார்கள்?
இந்த திட்டத்தின்படி, ரேஷன் பொருட்கள் வேனில் எடுத்துச் செல்லப்படும். அதேவேனில் பொருட்கள் எடை போடும் கருவி, விற்பனை முனைய கருவி, விற்பனை பதிவு புத்தகம் உள்ளிட்டவையும் கொண்டு செல்லப்படும். சோதனை முயற்சியில் ஒரு குடும்பத்தினருக்கு வழங்க 7 நிமிடங்கள் வரை தேவைப்பட்டுள்ளது. வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தின்போது பயனாளிகள் தடையின்றி ரேஷன் பொருட்களை பெறுவதற்காக அவர்களுக்கு முன்கூட்டியே தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சோதனை முயற்சியாக சென்னை, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகப்பட்டினம் , நீலகிரி மறறும் கடலூர் மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தியபோது சில சிரமங்களையும் ரேஷன் கடை பணியாளர்கள் எதிர்கொண்டனர். அந்த சிரமங்கைளயும் களைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு பணியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் தமிழ்நாடு முழுவதும் அமல்:
தற்போது 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகிக்க உள்ள நிலையில், படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களில் ஒருவர் கைரேகை பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பலரும் கடினமான வேலைகள் செய்வதால் அவர்களுக்கு ரேஷன் பொருட்களை வாங்குவதில் கை ரேகையை பதிவு செய்வதில் சிக்கல்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதை அரசு சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
திமுக செல்வாக்கை அதிகரிக்குமா?
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்த திட்டம் திமுக அரசின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆளுங்கட்சி எதிர்பார்க்கிறது.





















