”எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்துங்கள்; இதுதான் என் சபதம்” - தமிழிசை ஆக்ரோஷம்!
மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது.. சரியப்போகிறது.. என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது தூத்துக்கு, திருநெல்வேலி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெள்ள பாதிப்பை பார்வையிட்ட தமிழிசை:
முன்னதாக தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் நேரடியாக முதல்வரை பார்த்து கேட்கிறேன்.
18ஆம் தேதி இங்கே மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா? அல்லது "மக்களுடன் முதல்வர்" என்று கோவையில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?
வெள்ளம் சூழ்ந்த பிறகு அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. கூட்டணிக் கட்சிக்காக டெல்லி சென்றுவிட்டார். ஆனால் இப்போது பிரதமரை பார்க்க டெல்லி போனதாக கூறுகிறார்கள்.
உண்மையில் மாநில அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதில் தோல்வி அடைந்திருக்கிறது. அதோடு சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதேபோல தென்பகுதி மக்களை மீட்டெடுப்போம் என முதல்வர் கூறுகிறார். உண்மையில் சென்னையை நீங்கள் மீட்டெடுக்கவில்லை. சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டு எழுந்தார்கள்’’என்று கூறினார்.
தமிழிசையின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் சேகர்பாபு, சபாநாயகர் அப்பாவு உள்பட பல தலைவர்கள் தமிழிசையை விமர்சனம் செய்தனர். இதனிடையே அவரை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.
ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது:
இச்சூழலில், திமுகவிற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு... திண்டாடும் மாடலை வைத்து.... திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது... சரியப்போகிறது... இது சபதம்!
அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்... ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள்... சமூகத்திலும் காயப்படுத்துங்கள்..... அந்த ரத்தத்தில் தோய்த்து.... நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்..... இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம்” என்று கூறியுள்ளார்.