பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்
அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் கூட சரியில்ல என பாஜக தலைமையின் காதுகளுக்கு நயினார் நாகேந்திரனும் வானதி சீனிவாசனும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில தலைவர் பதவி அண்ணாமலையிடம் இருந்து நயினார் நாகேந்திரனிடம் சென்றதில் இருந்து பாஜகவில் 2 பிரிவாக பிரிந்து மோதல் நடந்து வருகிறது. நயினாரை விட தனக்கு தான் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை அண்ணாமலை காட்டி வருகிறார். நயினாரை தலைவராக்கியதால் கடுப்பான அவரது ஆதரவாளர்கள் நயினாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியே தேவையில்லை என்ற கருத்தையும் சொல்லி வருவதை பார்க்க முடிகிறது.
சமீபத்தில் மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, 2 பேரும் ஒன்றாக இணைந்து தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும் என்றும் அதிமுக கூட்டணி பற்றி தவறாக எதையும் பேசக் கூடாது என்றும் கறாராக சொல்லிவிட்டு கிளம்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகும் அமித்ஷாவின் கருத்துக்கு முரணான ஒரு கருத்தை வெளிப்படையாகவே சொன்னார் அண்ணாமலை.
2026ல் கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்லி வரும் நிலையில், அண்ணாமலை அதற்கு முரண்பாடாக 2026-ல் அமையப்போவது கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். அது பாஜக ஆட்சி என்றே நான் சொல்வேன். வரும் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவன் நான் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இருப்பினும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் எப்போதும் கட்டுப்படுவேன்” என இபிஎஸ்-ஐ சீண்டும் வகையில் பேசினார். அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினருக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.
இந்தநிலையில் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடவடிக்கைகள் தொடர்பாக நயினார் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் டெல்லி தலைமையிடம் புகார் சொல்லியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யார் சொல்வதையும் கேட்காமல் கூட்டணியை கெடுக்கும் வகையில் அண்ணாமலை பேசி வருவதாக புகார்களை அடுக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை ஆதரவாளர்கள் கட்சியினரையே கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பேசி வருவதாகவும், அதனால் உடனடியாக தலைமை தலையிட்டு அதற்கு முடிவுகட்ட வேண்டும் என சொல்லியுள்ளனர். அண்ணாமலை மற்றும அவரது ஆதரவாளர்களால் பாஜகவினருக்கே நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் நேரத்தில் அதுவே நமக்கு சிக்கலாக மாறிவிடும் என அண்ணாமலை மீதான குறைகளை அடுக்கியுள்ளதாக தெரிகிறது. அதேபோல் நயினார் தலைவரானாலும் தொண்டர்களின் பலம் தனக்கு இருக்கிறது என்பதை காட்டும் வகையில் அண்ணாமலை நடந்து கொள்வது உட்கட்சி மோதலை அதிகரிக்கும் என்றும் தமிழக பாஜகவினர் புலம்பி வருகின்றனர்.





















