MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் MLA பதவியை பறிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. கட்சிப் பதவிகளை இழந்த ஓபிஎஸ்-ன் MLA பதவிக்கும் சிக்கலா என்ற கேள்வி வந்துள்ளது.
பல கட்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு அதிமுக ஓபிஎஸ்-ன் கைகளில் இருந்து நழுவி சென்றது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் ஆனார் இபிஎஸ். பொதுக்குழு உறுப்பினர்களின் சப்போர்ட் இபிஎஸ்-க்கு இருந்ததால் ஓபிஎஸ்-ன் கட்சிப் பதவிகள் அனைத்தும் பறிபோனது. அதேபோல் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையும் ஆர்.பி.உதயகுமார் வசம் சென்றது.
அதிமுக தனது கைகளை விட்டு சென்ற பிறகு பாஜக கூட்டணியுடன் கைகோர்த்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்கள் பலம் எனக்கு தான் இருக்கிறது என காட்ட நினைத்த ஓபிஎஸ்-க்கு மக்களவை தேர்தல் தோல்வியை கொடுத்தது. ஆனால் பாஜக கூட்டணியில் அவருக்கான முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. தற்போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துவிட்டதால் ஓபிஎஸ்-ன் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஓபிஎஸ்-க்கு சீட் கொடுக்கமாட்டேன் என இபிஎஸ் முரண்டுபிடித்து வருவதாக சொல்கின்றனர். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஓபிஎஸ்-ம் அவரது ஆதரவாளர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்தநிலையில் ஓபிஎஸ்-க்கு அடுத்து ஒரு புது பிரச்னை உருவெடுத்துள்ளது. அவரது போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் அதிமுக MLA-வாக இருந்து கொண்டு மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் அப்பாவுக்கு மனு கொடுத்துள்ளார். அதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரையே எதிர்த்து அவர் போட்டியிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். நிபுணர்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பேரவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ்-ன் MLA பதவிக்கும் ஆபத்து வருமா என அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.





















