"படிப்பை விட்றாதடா தம்பி” வீட்டுக்கே போன கலெக்டர்! மாணவனுக்கு அட்வைஸ்
விருதுநகரில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களின் வீடுகளுக்கு கலெக்டரே நேரில் சென்று அறிவுரைகள் வழங்கி பள்ளியில் சேர்க்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பள்ளி இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனே மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பேசி வருவது பாராட்டுகளை பெற்றுள்ளது. படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் ஜெயசீலன் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் படிப்பை தொடாராமல் இடைநின்ற 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார்.
அவர்கள் சொன்ன காரணங்களின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்துள்ளார். மேலும் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறும் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.





















