TMC Yuvaraja Resigns : ”பதவியை ராஜினாமா செய்தார் த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா” இது தான் காரணமா..?
"நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் நீடித்த நிலையில், அந்த கூட்டணியில் வெளியே வந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்று சந்தித்திருந்தார் யுவராஜா”
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தன்னுடைய பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அந்த கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த பிறகும் அந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நீடித்தது. அப்போது, யுவராஜா நேரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியது சர்ச்சையானது.
திடீரென ராஜினாமா செய்தது ஏன்..?
ஆனால், அப்போது அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறிய யுவராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்தார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நீண்ட காலம் தான் வகித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார் யுவராஜா.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனிடம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து முறைப்படி கடிதத்தை யுவராஜா கொடுத்துள்ளார். அதில், எதிர்வரும் காலங்களில் கட்சியின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன் என்றும் தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய இளைஞரணி தலைவர் - விரைவில் அறிவிப்பு
யுவராஜா ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அந்த கட்சிக்கு புதிய இளைஞரணி தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஜி.கே.வாசனுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் புதிய நபர் ஒருவரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.வாசன் நியமிக்கவுள்ளதோடு, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் விதமாக 117 புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்கவும் ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அணிகள் கலைக்கப்படுகின்றனவா ?
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருக்கும் நிலையில் அதில் சில அணிகளை கலைத்துவிட்டு, முக்கியமான அணிகளை மட்டும் வைத்து கட்சியை நடத்தவும் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியால் வெற்றியை பெற முடியவில்லை. அதனால் கட்சி கட்டமைப்பை மாற்றினாலாவது வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியுமா ? என்ற திட்டத்தில் ஜி.கே.வாசன் இப்படியான ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக செல்கிறாரா யுவராஜா ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லையென்ற போதிலும் நேரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கே சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவருடன தனியாக பேசிவிட்டு வந்தார் யுவராஜா, அது குறித்து அப்போது கேட்டதற்கு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் இவ்வளவு நாள் அதிமுக கூட்டணியில் த.மா.கா இருந்த காரணத்தினால் பேச வந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், அப்போதே யுவராஜா அதிமுகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கு மாறாக அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்தார். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
ஆனால், பல ஆண்டு காலம் தான் வகித்த பதவியை இப்போது தூக்கி எறிந்துவிட்ட யுவராஜா, கட்சி பதவி ஏதும் இன்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. மற்ற அரசியல் தலைவர்கள் மாதிரி சில காலம் இருந்துவிட்டு வாய்ப்பு வரும்பட்சத்தில் அவர் அதிமுகவில் சென்று ஐக்கியம் ஆகிவிடுவார் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.
கட்சியில் இருந்து விலகுகிறேனா..? விளக்கம் அளித்த யுவராஜா..!
இது தொடர்பாக நாம் அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, இளைஞரணி தலைவர் பதவியைதான் ராஜினாமா செய்துள்ளேனே தவிர, கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பை துறக்கவில்லை. நீண்ட நெடிய நாட்கள் இளைஞரணி தலைவராக இருந்துவிட்ட காரணத்தினால் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இந்த பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியிலேயே பயணிப்பேன் என்றார்