CM stalin On Annamalai: இறங்கி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின், சொத்து விவரங்கள் என கூறி அண்ணாமலை அண்ணாமலை பல விவரங்களை வெளியிட்டார். இதை எதிர்த்து தான் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தாக்கல்:
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்துள்லார். அதில், ” பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும், முதலமைச்சருக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. தமிழகத்தில், இரண்டு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம் ,காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். எனவே பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு:
இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்பு, மனு மீதான விசாரணை எட்டு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.
உதயநிதி நோட்டீஸ்:
ஏற்கனவே, தனது சொத்து விவரங்கள் குறித்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறி, கடந்த மாதமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக சார்பிலும், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 கோடியே 1 ரூபாயை நஷ்ட தர வேண்டும் என அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே, திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி உள்ளிட்டோரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலினே, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரம், அண்ணாமலை வெளியிட்ட திமுக ஃபைல்ஸ் தொடர்பாக ஸ்டாலின் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.