மகாராஷ்டிராவில் அபாய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!– இந்திய மாநிலங்களிலேயே அதிகம்
கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என்கிற அலட்சியத்தில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை மும்பையில் தொடங்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் எனக் கொரோனா பாதிப்பு ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலைக்கான எச்சரிக்கையை அடுத்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களைக் காணொளி வழியாகச் சந்தித்தார். அப்போது வைரஸ் பரவல் தீவிரமடையாமல் இருக்க அனைத்து மாநிலங்கள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். முக்கியமாக தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது, கிராமங்களுக்குப் பரவாமல் தடுப்பது உள்ளிட்டவை அவரது பேச்சில் இடம்பெற்றிருந்தன.
கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததன் எதிரொலி இது. இந்த வாரத் தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 18000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 23,179 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 60 சதவிகிதம். மும்பை, தானே, நவி மும்பை உள்ளிட்ட மக்கள் நெருக்கடிமிக்க மெட்ரோ பகுதிகளை அடக்கிய தானே பிரிவில் மட்டும் இதுவரையில் பத்தொன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என்கிற அலட்சியத்தில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை மும்பையில் தொடங்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் எனக் கொரோனா பாதிப்பு ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.