தேனி : கடும் பனிப்பொழிவால் 1 கிலோ செண்டு பூ ரூ.50 முதல் 60 வரை விற்பனை - விவசாயிகள் கவலை
கடும் பனிப்பொழிவால் நாள்தோறும் 5 கிலோ பூக்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதால், 1 கிலோ செண்டு பூ ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகிறது. விளைச்சல் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக, கேரள எல்லை இரு மாநிலத்தை இணைக்கும் எல்லை மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கேரள மாநிலத்தில் உள்ள குமுளி, கட்டப்பனை, வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கம்பம், சீலையம்பட்டி பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை அதிகரித்து இருந்தது. பூக்கள் விவசாயம் செய்யப்படும் பகுதிகளான உப்புக்கோட்டை, பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, சீலையம்பட்டி, பூதிப்புரம், வாழையாத்துபட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை, முல்லை, சாதிப்பூ, கோழிக் கொண்டை, செண்டுப்பூ உள்ளிட்ட பலவகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைச்சலடையும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சபரிமலை ஐயப்பன் மற்றும் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் செடிகளிலேயே பூக்கள் கருகி வருவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கரில் செண்டு பூக்கள் விவசாயம் செய்யப்படும்போது வழக்கமாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 40 முதல் 50 கிலோ பூக்கள் கிடைக்கும்.
தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவால் 5 கிலோ பூக்கள் கிடைப்பதே பெரிதாக உள்ளதாகவும். 1 கிலோ செண்டு பூ ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகிறது. பூக்கள் விளைச்சல் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்