கொரோனா கட்டுப்பாடுகளை கடந்து மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் கொடைக்கானல்...!
’’சில மாதங்களுக்கு பிறகு சுற்றுலாத்தலங்கள் திறப்பால் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’’
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டநிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கும் விடுதிகள் நிரம்பியும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாபயணிகளை நம்பியுள்ள சிறு , குறு வியாபாரிகளின் வியாபாரம் அதிகரித்து மீண்டும் இயல்புநிலைக்கு கொடைக்கானல் திரும்பி வருகிறது.
கொடைக்கானலில் சில மாதங்களுக்கு பிறகு சென்ற வாரம் 24 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் சில சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள் கேளிக்கை கூடங்கள் திறக்கப்பட்டன. வார நாட்களில் கூட்டம் அதிகம் இல்லாதநிலையில், சுற்றுலாத்தலங்கள் திறந்தபிறகு வார விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளாக வருவோர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் குளிர் நிலவி இதமான தட்பவெப்பநிலையுடன் காணப்படுகிறது.
தற்போது கொடைக்கானலில் மலைகளின் மேல் மேகக்கூட்டங்கள் தழுவிச்செல்ல அதிகமான மழை பொழிவால் வெள்ளி நீர் வீழ்ச்சியில் நீர் வரத்தும் அதிகரித்துள்ள நிலையிலும், ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், அப்பர் லேக் வியூ, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் ஈர்த்துள்ளது. மாலை வேளையில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்வதிலும் சிறுவர்கள் ஆர்வம் காட்டினர்.
சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டநிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தங்கும் விடுதிகள் நிரம்பின. நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் கட்டண உயர்வால் சுற்றுலாபயணிகளை அதிருப்திக்குள்ளாகியது. கொடைக்கானலில் தினந்தோறும் வாகனங்கள் அணிவகுத்து வருவதால் கொடைக்கனல் முக்கிய சாலை பகுதிகளில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீதோஷ்ணநிலையை பொறுத்தவரை கொடைக்கானலில் நேற்று பகலில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் பகலிலேயே குளிர் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. காற்றில் 79 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டது. ஆறு கிலோ மீட்டர் வேகத்தில் குளிர் காற்றுவீசியது. இரவில் குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதால் கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர் நிலவியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற