Waqf Amendment: வக்பு சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி.. இடைக்கால உத்தரவு என்ன தெரியுமா.?
வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன தெரியுமா.?

மத்திய அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை நேற்றும், இன்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்றைய விசாரணையின் முடிவில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
வக்பு சட்டத்திற்கு எழுந்த கடும் எதிர்ப்பு
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் வக்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அண்மையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், வக்பு சொத்துக்களின் நிர்வாகத்தை நெறிப்படுத்த முயலும் இந்தச் சட்டத்திற்கு, இஸ்லாமிய சமூகத்தினரிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வக்பு குழுவிற்குள் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் உறுப்பினர் ஆகலாம் என்பதையும், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் என்பது போன்ற விதிகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் வன்முறைகளும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை
இந்நிலையில், வக்பு சட்டத்தை எதிர்த்து, திமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மதக் குழுக்கள் வழக்குகளை தாக்கல் செய்தன. நாடு முழுவதிலுமிருந்து மொத்தமாக 73 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்து, இஸ்லாமியர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வக்பு சட்டத்திற்கு எதிரான மனுக்களின் தொகுப்பி, நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்சய் குமார், நீதிபதி கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது. நேற்றைய விசாணைக்குப்பின், இன்றும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய வக்பு சட்டத்தின்படி நிலம் வகைப்படுத்துதல், உறுப்பினர்கள் நியமனம் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது. இதனால், நிலம் வகைப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் ஆகியவற்றில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாமியர்கள் அல்லாதோர் உறுப்பினர்களாகலாம் என்ற திருத்தத்திற்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், வக்பு என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைக்க மத்திய அரசு ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

