KN Nehru: கே.என்.நேருவுக்கு செக்; ஓரம்கட்டிய ஸ்டாலின்?- கைமாறும் திருச்சி திமுக!
ஏற்கனவே அன்பில் மகேஷுக்கு தனக்கு நிகரான அமைச்சர் பதவியும் மாவட்ட பொறுப்பும் வழங்கப்பட்டதிலேயே கே.என்.நேருவுக்கு கடும் அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது.

கே.என்.நேருவின் கோட்டையாக இருந்த திருச்சியில் அன்பில் மகேஷை நுழைத்து அவரது அதிகாரத்தை குறைத்ததாக திமுக தலைமை மீது நேரு அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது திருச்சி சிவாவுக்கும் பதவி கொடுத்துள்ளது கேஎன் நேருவை ஒரேடியாக ஓரங்கட்டுவதற்கான முன்னெடுப்பு என தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மூத்த நிர்வாகி, அமைச்சர் என திருச்சியின் திமுக முகமாக அறியப்படுபவர் கே.என்.நேரு. பல ஆண்டுகளாக ஒட்டுமொத்த திருச்சியை தனது கண்ட்ரோலில் வைத்து வந்தவர் நேரு. ஆனால் உதயநிதியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது,
திருச்சியை மூன்றாக பிரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷை நியமித்தது திமுக தலைமை. மேலும் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கி லைம்லைட்டுக்கு கொண்டு வந்தது. திருச்சி திமுகவின் ஒரே முகமாக இருந்து வந்த கே.என்.நேருவுக்கு தலைமையின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை கொடுத்தது.
திருச்சி யாருடைய கோட்டை?
திருச்சி யாருடைய கோட்டை என்பதில் கே.என்.நேரு vs அன்பில் மகேஷ் என போட்டாபோட்டி இருப்பதாக நீண்டநாட்களாகவே பஞ்சாயத்து தொடர்ந்து வருகிறது. ஆனால் அன்பில் மகேஷ் கை ஓங்குவதாக கே.என்.நேரு ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு புது முகங்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதால் மூத்த அமைச்சர்கள் அனைவரும் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்டார். அப்போது கட்சிக்குள்ளேயே பல உள்ளடி வேலைகள் நடந்து குழப்பத்தை ஏற்படுத்தியதும் அனைவரும் அறிந்த கதைதான்.
எலியும் பூனையுமா?
இந்நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அவரது துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்பில் மகேஷுக்கு தனக்கு நிகரான அமைச்சர் பதவியும் மாவட்ட பொறுப்பும் வழங்கப்பட்டதிலேயே கே.என்.நேருவுக்கு கடும் அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற எம்.பி.யாக உள்ள திருச்சி சிவாவும் கே.என்.நேருவும் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர். இருவரின் ஆதரவாளர்கள் அடிக்கடி வம்பு வளர்த்து காவல்துறை வரை செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சூழலில் திருச்சி சிவாவுக்கும் தலைமை கழக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது நேருவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கே.என்.நேருவின் பவரை குறைக்கும் வகையில் தலைமையின் நடவடிக்கைகள் இருந்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது திமுக தலைமை, கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் அமைதி காத்து வந்ததாகவும், செந்தில் பாலாஜிக்கு கொடுத்த சப்போர்ட்டில் துளி அளவும் நேருவுக்கு ஸ்டாலின் கொடுக்கவில்லை எனவும் குமுறுகின்றனர் நேரு ஆதரவாளர்கள்.
எதிர்க் கட்சியின் வதந்தி?
இப்படி ஒருபுறம் திமுகவில் நேருவின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக ஊகங்கள் எழுந்தாலும், மறுபுறம் நேருவும் ஸ்டாலினும் ஒருவொருக்கொருவர் பக்க பலமாகத்தான் இருப்பார்கள், இவை அனைத்தும் எதிர்க்கட்சியினர் பரப்பும் வதந்தி என அறிவாலய வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

