AIADMK BJP Alliance: பல்ஸை எகிறவைக்கும் ரிப்போர்ட்! கலக்கத்தில் திமுக.. காலரை தூக்கும் அதிமுக!
AIADMK BJP Alliance: வரும் 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், ஆளும் திமுகவிற்கு அதிமுக கூட்டணியிடமிருந்து கடும் போட்டி நிலவும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

AIADMK BJP Alliance: அதிமுக ஆட்சிகட்டிலில் அமரும்போதெல்லாம் தனிப்பெரும்பான்மையை பெறுவது, கட்சியின் வலுவான வாக்கு வங்கியை உணர்த்துகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில், அதிமுக மத்தியில் ஆளும் பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 2024 மக்களவை தேர்தலில் வாக்குகள் சிதறி திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றியதை போன்று நிகழாமல் இருக்க, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் நோக்கில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு சட்டபொபேரவை தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளித்தாலும், தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருவதே தொடர்கதையாக உள்ளது. இந்த வரலாறு மற்றும் ஆட்சிக்கு எதிரான மக்களிடையே நிலவும் அதிருப்தி ஆகியவற்றை தங்களுக்கு சாதமாக பயன்படுத்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணி திட்டமிட்டுள்ளது.
தவறை திருத்தும் பாஜக:
விஜயின் அரசியல் வருகையால், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் மும்முனைப்போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், கடந்த மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை நம்பி களம் கண்டது தவறு என்பதை பாஜக உணர்ந்துள்ளது. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒற்றைத்தலைமையாக உயர்ந்து இருப்பதை புரிந்து மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதிலும் எடப்பாடிக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
மாஸ் காட்டும் அதிமுக:
திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆரால் கடந்த 1972ம் ஆண்டு அதிமுக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாட்டில் 11 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் வெறும் நான்கில் மட்டுமே அதிமுகவை விட திமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில், மூன்றில் அதிமுக கூட்டணியும், இரண்டில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக வென்ற கடந்த 2001, 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில், கூட்டணி கட்சிகளின் ஆதரவே இன்றி முறையே 132, 150, மற்றும் 133 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், திமுக 2006ல் 96 இடங்களில் மட்டுமே வென்று கூட்டணி ஆட்சி அமைத்தது. அதேநேரம், 2021ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தனிப்பெரும்பான்மையும் ஆட்சி அமைத்தது. அதிமுக 2006 மற்றும் 2021ம் ஆண்டு தேர்தல்களிலும் தோல்வியுற்று இருந்தாலும், முறையே 61 மற்றும் 66 இடங்களை கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால், திமுக தோற்ற 2001 மற்றும் 2011 தேர்தல்களில் முறையே வெறும் 31 மற்றும் 23 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஈடுகொடுக்க முடியாத திமுக+..
கடந்த 2011,2016 மற்றும் 2021 ஆண்டுகளில் நடந்த 3 சட்டமன்ற தேர்தல்களிலும், குறிப்பிட்ட 38 தொகுதிகளில் ஒருமுறை கூட அதிமுக தோல்வியையே சந்திக்கவில்லை. இத்தையக தொகுதிகள் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 15 மட்டுமே உள்ளன. (கடந்த 3 தேர் தல்களில் காங்கிரஸ் மட்டுமே திமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சி என்பதால் இரண்டு கட்சிகளும் ஒன்றாக கணக்கிடப்பட்டுள்ளன). அதேநேரம், கடந்த 3 முறை நடந்த தேர்தல்களில் குறிப்பிட்ட 81 தொகுதிகளை அதிமுக இரண்டு முறை கைப்பற்றியுள்ளது. இத்தகைய தொகுதிகள் திமுக கூட்டணிக்கு 62 தொகுதிகள் மட்டுமே உள்ளன. இதேகாலகட்டத்தில் அதிமுக இரண்டு அல்லது மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 119. அதாவது ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காட்டிலும் ஒரு தொகுதி அதிகமாகும்.
திமுகவின் வலுவான கூட்டணி:
தமிழ்நாட்டில் வாக்குகளை சிதறாமல் அறுவடை செய்ய கூட்டணி அவசியம். அதிமுக வலுவான கட்சியாக இருந்தாலும், கூட்டணி விவகாரத்தில் திமுக கம்பீரமாக அமர்ந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உட்பட பல கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு மாநிலம் முழுவதும் பரவலான வாக்கு வங்கி உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடதுசாரிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே விசிகவிற்கு நல்ல ஆதரவு உள்ளது.
அதிமுக கூட்டணி எப்படி?
முன்னதாக தேமுதிக உடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைத்து இருந்தது. ஆனால், விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு கட்சி எந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம், மக்களவை தேர்தலின் போது பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக கூட்டணியில் களம் கண்ட பாஜக படுதோல்வியை சந்தித்தது. தென்மாவட்டங்களில் தேவர் சமூக வாக்குகளை தாண்டி, டிடிவி தினகரனால் பெரிய தாக்கத்தை எற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான், ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் வெடித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டால், தனித்து போட்டியிட்டு திமுகவிற்கு மீண்டும் வெற்றி வாய்ப்பை வழங்குவதை தடுக்க, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதன் மூலம், அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியை தனக்கு சாதகமாக்கி நகர்ப்புறங்களில் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொண்டு கூட்டணிக்கும் பலனளிக்கலாம். வழக்கமாகவே அதிமுக கிராமப்புறங்களில் வலுவானது என்பதால், திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கலாம். அதிமுக - பாஜக கூட்டணி கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ள சூழலில், பாஜகவின் புதிய மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் வசிக்கும் தென்மாவட்டங்களிலும் கணிசமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மக்களவை தேர்தல் முடிவு தரவுகள்:
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்து போட்டியிட்டன. அதன் முடிவில் திமுக கூட்டணி 47 சதவிகித வாக்குகளை பெற்றது. அதேநேரம், அதிமுக 23 சதவிகித வாக்குகளையும், பாஜக கூட்டணி 18 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது. ஒருவேளை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால், அதிகபட்சம் 13 தொகுதிகள் வரை வெற்றி பெற்று இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மக்களவை தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் அடிப்படையில் 221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. அதிமுக 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. சேர்ந்து போட்டியிட்டு இருந்தால், 84 தொகுதிகள் வரை அதிமுக - பாஜக கூட்டணி முன்னிலை பெற்று இருக்கலாம்.
பாஜக திட்டம் பலிக்குமா?
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தரவுகள் அடிப்படையில் வலுவானதாக இருந்தாலும், பொதுவெளியில் அவை பொருந்தாக் கூட்டணியாகவே உள்ளது. திமுகவிற்கு ஆட்சிக்கு எதிரான மனப்பான்மை பாதகமாக இருக்கும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியில் நிர்வாகிகள் சேர்ந்து பணியாற்றுவார்களா? என்பதே கேள்வியாக உள்ளது. இந்தி திணிப்பு, மாநில அரசு உரிமை என திமுக களமாடி வரும் சூழலில், சட்ட-ஒழுங்கு போன்ற உள்ளூர் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளதால், அரசியலில் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம். எனவே, பாஜகவின் கூட்டணி கணக்குகள் பலிக்குமா? என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.





















