குற்றங்களை தடுக்க வனத்துறையில் வெளிநாட்டு நாய்களுக்கு பதிலாக நாட்டு நாய்களுக்கு பயிற்சி...!
தமிழக அரசு சார்பாக உருவாக்கப்பட்ட வன அதிரடிப் படையில், வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக நாட்டு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வனக்குற்றங்களை தடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக காவல்துறையில் முக்கிய தடயங்களை கண்டுபிடிப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், பயிற்சி பெற்ற நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதே போன்று வனத்துறையிலும் வனக்குற்றங்களை தடுக்கவும் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையில் நாய்கள் பயன்பாடு குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வனத்துறையில் பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்த திட்டம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியில், வனத்துறையில் பயன்படுத்துவதற்காக நாட்டு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்திற்கு அடுத்து, தமிழக அரசின் சார்பில் வன அதிரடிப்படை பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த வன அதிரடிப்படை ஆல்பா மற்றும் டெல்டா என இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இந்த வன அதிரடிப்படையினர், வனத்திற்குள் ஏற்படும் தீ விபத்து, வனத்தில் ஏற்படும் பிரச்சனை, வன விலங்குகளுக்கு ஏற்படும் பிரச்சனை, வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை, வனப்பகுதியில் மக்கள் சிக்கி கொண்டால் அவர்களை மீட்பது போன்ற பணிகள் அவர்களது அடிப்படைப் பணியாகும்.
தற்போது இந்த வனஅதிரடி படை பிரிவில் நாட்டு நாய்கள் இணைக்கப்பட்டுள்ளது. கன்னி, சிப்பி பாறை, கொம்பை, ராஜபாளையம் போன்ற நாட்டு நாய்கள் நம்முடைய தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டு தமிழ்நாடு வன அதிரடி படை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயலாற்றி வருகிறது. இதில் நான்கு நாய்கள் வன அதிரடி படையிலும், நான்கு நாய்கள் கோவை வனமன்றத்திலும் உள்ளது. இந்த நாட்டு நாய்களுக்கு முதலில் மோப்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் வெட்டப்பட்ட சந்தனமரம் தொடர்பாக பயிற்சி எடுத்தல், வனவிலங்குகள் தொடர்பான பயிற்சி எடுத்தல், காடுகளில் இறந்த விலங்குகளின் குறித்த பயிற்சி, வனவிலங்குகள் மூலமாக செய்யப்பட்ட பொருட்களை கண்டுபிடிக்கும் பயிற்சி, வனப் பகுதியில் ஏதேனும் மரம் வெட்டப்பட்டால் அந்த மரத்தை வெட்டிய நபரை கண்டுபிடிக்கும் பயிற்சி, மற்றும் வனப் பகுதிக்குள் கஞ்சா செடி வளர்ப்பது கஞ்சா விற்பனை செய்வது, போதைப் பொருட்கள் தொடர்பான பயிற்சி ஆகியவை நாட்டு நாய்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் வன அதிகாரிகள் இடும் கட்டளைக்கு ஏற்ப நாட்டு நாய்கள் செயல்படும் விதமாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தாவுதல், நீந்துதல், பதுங்கி செல்லுதல், வேகமாக பாய்தல் போன்ற கூடுதல் பயிற்சிகளும் நாட்டு நாய்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வனச்சரக அலுவலர் கூறுகையில், " நாட்டு நாய்கள் இயல்பாகவே மனிதர்களுடன் பரவக்கூடியது, நாட்டு நாய்கள் எளிதில் புரிந்து கொள்ளவும், வன அலுவலர்கள் சொல்லும் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டது. இந்த நாட்டு நாய்கள் வேகமாக பாயக் கூடியது. வேட்டையாடும் தன்மை கொண்டது. கன்னி வகை நாய்கள் அதிகமாக சக்தி கொண்டதாகவும் விசுவாசமாகவும் இருக்கக் கூடிய ரகம்.
வெளிநாட்டு நாய்களை வனத்துறையில் பயன்படுத்தும் போது அதற்கான உணவு செலவுகளும், பராமரிப்பு செலவும் அதிகமாகும். மேலும் வெளிநாட்டு நாய்களுக்கு நாட்டு நாய்களை காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் வெளிநாட்டு நாய்களுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் நம்முடைய நாட்டு நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படம் வாய்ப்பு குறைவு. நாட்டு நாய்களே பராமரிப்பதற்கான செலவு, உணவிற்கான செலவும் குறைவு. நாட்டு நாய்களுக்கு தினமும் இரண்டு முட்டை, 500 கிராம் அரிசி உணவு , 300 கிராம் சிக்கன் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டு நாய்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில், நாட்டு நாய்களை பாதுகாக்கும் விதமாக, காவல்துறையிலும் வனத்துறையிலும் நாட்டு நாய்களை பயன்படுத்துவது ஒரு முயற்சியாக இருக்கும் என கருதுகிறோம் என்றார்.