Video: மறைந்திருந்து தாக்கும் தெருநாய்கள்.. ஓட்டம் பிடித்து உயிர் தப்பிய சிறுவர்கள் - ஷாக்கிங் வீடியோ!
சிசிடிவி வீடியோவில் இரண்டு சிறுவர்கள் அதிவேகமாக வீட்டை நோக்கி ஓடி வருகின்றனர். பின்னால் 5,6 தெருநாய்கள் கொலைவெறியுடன் அவர்களை துரத்துகின்றன
தெரு நாய்களின் தாக்குதல் தொடர்பான செய்திகள் நாடு முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. நாய்கடியால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் தெருநாய்களின் தாக்குதலில் இருந்து இரண்டு சிறுவர்கள் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் நடந்த இந்த சம்பவம் தெருநாய்களில் தாக்குதலை வெட்டவெளிச்சமாக காட்டுகிறது.
அந்த சிசிடிவி வீடியோவில் இரண்டு சிறுவர்கள் அதிவேகமாக வீட்டை நோக்கி ஓடி வருகின்றனர். பின்னால் 5,6 தெருநாய்கள் கொலைவெறியுடன் அவர்களை துரத்துகின்றன. வேகமாக ஓடி வரும் சிறுவர்கள் வீட்டுக்குள் புகுந்து வாசல் கேட்டை பூட்டுகின்றனர். அந்த நாய்கள் திரும்பி செல்கிறது. அதே இடத்தில் மறைந்திருக்கும் நாய்கள் வேறொருவரை இரவில் துரத்துகின்றன.இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பதிவிட்டு வருகின்றனர்.
#WATCH | Kerala: Students in Kannur manage to escape unharmed as stray dogs chase them in the locality (12.09) pic.twitter.com/HPV27btmix
— ANI (@ANI) September 13, 2022
கேரளாவில் நாய்க் கடி பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை மட்டும் 8 பேர் பலியாகி உள்ளனர். அண்மையில்கூட கேரளாவில், ரன்னியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, நாய்க்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழக்கவும் நேர்ந்தது.
இது தொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துவிட்டதாகவும் அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகளிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், லிஃப்ட்டில் சிறுவனை வளர்ப்பு நாய் கடித்த வீடியோ காண்பிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, ''நான் கூட நாய்களை அதிகம் விரும்புவேன். ஆனால் வளர்ப்பு நாய்கள், பொது மக்களில் யாரையாவது கடித்தால், அதை வளர்ப்போர்தான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். கடிபட்டவர்கள் சிகிச்சை பெறும் செலவையும், பராமரிப்புச் செலவையும் ஏற்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? இந்த வழக்கில் வரும் 28-ம் தேதி அன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
Another attack by #Pitbull dog, this time a 10 year old kid is became the victim, 150 stitches comes on his face, location: Gaziabad, Y aren't this breed ban? pic.twitter.com/HljLNKzRQU
— vipul kashayp (@kashyapvipul) September 8, 2022
முன்னதாக லக்னோவில் வயதான பெண் ஒருவர் பிட் புல்லால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டார். அதேபோல் குருகிராமில், பிட் புல் தாக்குதலில் ஒரு பெண் பலத்த காயம் அடைந்தார். மீரட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.
அதேபோல் நேற்று உத்தரப் பிரதேசம், காசியாபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனின் முகத்தை பிட்புல் இன நாய் கொடூரமாக கடித்துக் குதறிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.