என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தி நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில், ”சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இருக்கும் எனது அலுவலகம் அருகே சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். அவர்கள் என் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்.
இச்சம்பவம் கடந்த பத்தாம் தேதி நடைபெற்றது. அவர்களின் சதித்திட்டம் என்ன என்று தெரியவில்லை. அது விசாரிக்கப்பட வேண்டும். என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது.
அந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்தனர் என்பதை விசாரிக்க வேண்டும். யாருடைய உத்தரவின்படி என்னை நோட்டமிட்டனர் என போலீசார் விசாரிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா அக்கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு அதிரடி முடிவுகளை தலைமைக்கு எடுத்துரைத்து வருகிறார்.
ஏற்கெனவே திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுகவும் பாஜகவும் கைக்கோர்த்து உள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
இந்நிலையில் முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த சமயத்தில் தவெகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒரு நிர்வாகி உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















