Tirumala Tirupati: திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்.. 35 ஆயிரம் லட்டுகள் திருடி வெளிச்சந்தையில் விற்பனை.. 5 பேர் கைது..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகள் திருடி வெளிச்சந்தையில் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுகள் திருடி வெளிச்சந்தையில் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பணக்கார கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கோடை விடுமுறையில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவதால் கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருப்பதி திணறி போயுள்ளது. பாதயாத்திரை, இலவச தரிசனம், சிறப்பு கட்டணம் தரிசனம், விஐபி தரிசனம் என பல முறைகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனாலும் பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காத்திருப்பு மண்டபத்தில் அனைத்து அறைகளும் நிரம்பி வழியும் நிலையில், இங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் 3 கி.மீ. நீளத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். அதேசமயம் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகளை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும் இலவச தரிசனத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை எளிமையாக்க ஏதுவாக, விஐபி தரிசனத்தை 3 நாட்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
கடந்தாண்டை விட நடப்பாண்டில் அதிகளவு பக்தர்கள் வருகை தருவதால் உண்டியலில் காணிக்கையும் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி என்றாலே நம் அனைவருக்கும் நியாபகம் வருவது லட்டு தான். முன்னதாக பக்தர்களுக்கு தேவையான லட்டுகளை தேவஸ்தானம் சிரமமின்றி விநியோகம் செய்து வந்தது. ஆனால் தற்போது ஒருவருக்கு இத்தனை லட்டுகள் தான் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிசந்தையில் லட்டுகள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிக்கும் இடங்களில் இருந்து லட்டுகள் தட்டுகளில் வைக்கப்பட்டு தேவஸ்தானம் கவுண்டர்களுக்கு கொண்டு செல்லப்படுபது வழக்கம். ஒரு தட்டில் 50 லட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். இப்படியான நிலையில் இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளை திருடி வெளிசந்தையில் விற்பதாக தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் லட்டுகள் எடுத்துச் செல்லும் போது அதிகாரிகள் கவனித்து வந்தனர்.
அப்போது தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் 15 தட்டுகளில் வைக்கப்பட்டு இருந்த 750 லட்டுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. உடனடியாக அவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள் லட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் இதுவரை சுமார் 35 ஆயிரம் லட்டுகள் திருடியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 5 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.