Rottweiler Dog: 13 ஆண்டுகளுக்கு முன் 72 வயது முதியவரை கடித்த ராட்வைலர் நாய்: உரிமையாளருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மும்பையில் ராட்வைலர் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று, 72 வயது முதியவரை தாக்கிய சம்பவத்தில், உரிமையாளருக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலானோர் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பது பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு முக்கிய வழக்கமாக உள்ளது. குறிப்பாக, நாய்களை அதிலும் விலை உயர்ந்த உயர் ரக மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நாய்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். குடும்பத்தில் ஒரு நபராகவே அந்த செல்லப்பிராணிகளை கருதி, மிகுந்த பாசமுடன் வளர்த்து அதற்கேற்ற சகல வசதிகளையும் வீடுகளிலேயே செய்து தருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டு நாயான ராட்வைலர் 13 ஆண்டுகளுக்கு முன் 72 வயது முதியவரை தாக்கிய சம்பவத்தில் நாயின் உரிமையாளருக்கு மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதியவர்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜி (44). இவர் ஒரு தொழிலதிபர். இவரது வீட்டிற்கு அருகில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் சைரஸ் பெர்சிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அடிக்கடி இரண்டு பேர் தெருவில் இறங்கி சண்டை போடுவார்கள். இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி வழக்கம்போல் சண்டை ஏற்பட்டது.
அப்போது, சைரஸ் பெர்சி வீட்டின் முன்பு கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அதில் ராட்வைலர் நாய் குரைத்து கொண்டிருந்தது. இதனை கண்ட சைரஸ் பெர்சி காரின் கதவை திறக்க, அந்த நாய் 72 வயது முதியவர் மீது பாய்ந்தது. அவரை கீழே தள்ளி அந்த நாய் கடித்து குதறியிருக்கிறது.
தீர்ப்பு
நாய் கடித்ததில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நலம் தேறிய முதியவர், இந்த சம்பவத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது சுமார் 13 ஆண்டு நடைபெற்று வந்து நிலையில், தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பில், "ராட்வைலர் நாய்கள் ஆக்ரோசமானது என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பாக வைத்திருக்காமல் இருந்தது, அதன் உரிமையாளரின் அலட்சியமாக தெரிகிறது. ஆபத்தான விலங்குகளை கவனமுடன் கையாள உரிமையாளர் தவறியிருக்கிறார். எனவே சைரஸ் சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜிக்கு மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டை விதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
ராட்வைலர் நாய்
இந்தியாவில் நாட்டு நாய் இனங்கள் இருந்தாலும் மக்கள் அதிகம் விரும்பி வாங்குவது வெளிநாட்டு இன நாய்கள் தான். அதில் ஒன்று தான் இந்த ராட்வைலர் நாய். இது ஜெர்மன் நாட்டை சேர்ந்தவை. இந்த நாய்களை முதலில் விவசாயிகளே அதிகம் பயன்படுத்தினர். ஏனெற்றால் கால் நடைகளை மேய்க்க மேய்ப்பாளருக்கு உதவியாக இருப்பதனால் இது வளர்க்கப்பட்டது.
பின்னர், வீட்டிலும் வளர்க்க தொடங்கினர். 9 முதல் 12 ஆண்டுகள் வரை என்பது இதன் வாழ்நாளாகும். இதன் குணமானது ஆக்ரோசமானதாக இருக்கும். இது உரிமையாளரின் கட்டளைக்கு மட்டுமே அடிபணியும் பண்பு கொண்டது. இது தாக்குதலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.