கத்தாரில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை - அதிர்ந்து போன மத்திய அரசு
மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர்களின் வழிகாட்டுதலில்தான், ஒரு காலத்தில் முக்கியமான இந்திய போர் கப்பல்கள் இயங்கி வந்துள்ளது.
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை:
மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர்களின் வழிகாட்டுதலில்தான், ஒரு காலத்தில் முக்கியமான இந்திய போர் கப்பல்கள் இயங்கி வந்துள்ளது. இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர்கள், பிற்காலத்தில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ந்துள்ளனர். இந்த தனியார் நிறுவனம்தான், கத்தார் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளது.
தனியார் நிறுவனத்துக்காக பணியாற்ற வந்த இவர்களை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, கத்தார் உளவுத்துறை கைது செய்தது. இந்த கைது தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு செப்டம்பர் மாதம் தெரிய வந்தது. செப்டம்பர் 30ஆம் தேதி, குடும்ப உறுப்பினர்களிடம் பேச இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கைதாகி ஒரு மாதத்திற்கு பிறகு, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள் சென்று அவர்களை சந்தித்தனர்.
கத்தார் நீதிமன்ற தீர்ப்புக்கு காரணம் என்ன?
அப்போது இருந்து இப்போது வரை இவர்கள் தனிமை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை தந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரண தண்டனை தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நாங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம். சட்ட ரீதியாக இதில் என்ன செய்யலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் வழங்குகிறோம். வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தூதரக உதவிகளையும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். கத்தார் அதிகாரிகளிடமும் தீர்ப்பை எடுத்துக் கூறுவோம். இந்த வழக்கின் விசாரணையின் ரகசிய தன்மை காரணமாக, இந்த நேரத்தில் எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் நீதிமன்ற விசாரணை இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தங்களிடமே தெரிவிக்கவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா காரணமா? பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் பைடன்