நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
கடந்த 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட இஸ்லாமிய வேட்பாளர் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.
இந்திய அரசியலைப்பின் முகப்புரையில் மதச்சார்பற்ற நாடு என குறிப்பிடப்பட்டிருந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அரசியந்திரம் குறிப்பிட்ட மதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது தொடர் கதையாகிவருகிறது.
குறிப்பாக, சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் பூஜையில் உலகின் மிக பெரிய ஜனநாயக மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் கலந்து கொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளது. இதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, பியூ என்ற ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், மத சகிப்புத்தன்மை குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தை பெற்றிருந்தது பிரச்சினையின் ஆழத்தை எடுத்துரைக்கிறது. 198 நாடுகள் கொண்ட பட்டியலில் சிரியா, நைஜீரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இதில், நினைவில் கொள்ளதக்க வேண்டியது என்னவென்றால் இந்தியாவில் மட்டும் மத மோதல்கள் அதிகரிக்கவில்லை. உலகம் முழுவதுமே மத மோதல்கள் அதிகரித்துள்ளதாக பியூ ஆய்வு கூறுகிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை சமூகத்தில் மட்டுமின்றி, அரசியலில் விரிவடைந்திருக்கிறது. அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துவது சமூக ரீதியாக தனிமைப்படுத்துவது, இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைவை. இதன் தொடர்ச்சியாகத்தான், இன்னும் ஒரே மாதத்தில் நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதி இல்லாத ஆளுங்கட்சியாக பாஜக மாற உள்ளது.
உலகின் மிக பெரிய அரசியல் கட்சி என சொல்லி கொள்ளும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) ஒரு இஸ்லாமிய பிரதிநிதி கூட இல்லாத சூழல் ஜூலை 7ஆம் தேதிக்கு பிறகு உருவாகவுள்ளது. அதுமட்டுமின்றி, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளில் பாஜகவுக்கு என ஒரு இஸ்லாமிய பிரதிநிதி கூட இல்லாத அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை என இந்தியாவில் மொத்தம் 4,908 இடங்கள் உள்ளன. இதில், மக்களவையில் 543 இடங்களும் மாநிலங்களவையில் 245 இடங்களும் உள்ளன. மீதமுள்ள 4,120 இடங்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளிலிருந்து வருகின்றன. இதில், மக்களவை மற்றும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெரும்பான்மயை பெற்றுள்ள பாஜக, இஸ்லாமியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்காமல் இருப்பது பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அனைவருக்குமான வளர்ச்சி என பாஜக கோஷம் எழுப்பி வந்தாலும், களச்சூழல் வேறாகவே உள்ளது. பாஜகவின் மீதமுள்ள இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் (அனைவரும் மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) பதவிகாலம் விரைவில் நிறைவுபெறவுள்ளதால் இந்த சூழல் ஏற்படவுள்ளது.
பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எம். ஜெ. அக்பருக்கு எதிராக பல்வேறு பெண்கள் பாலியன் புகார்களை அளித்ததை தொடர்ந்து, அவர் தனது அமைச்சர் பதவியை கடந்த 2018ஆம் ஆண்டு ராஜிநாமா செய்தார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இவரின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது. பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ள சையத் ஜாபர் ஆலமின் எம்பி பதவிக்காலம் ஜூலை 4ஆம் தேதியோடும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக உள்ள முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் ஜூலை 4ஆம் தேதியோடும் முடிவடைகிறது.
இதன் காரணமாகத்தான், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு என ஒரு இஸ்லாமிய பிரதிநிதி கூட இல்லாத சூழல் உருவாகவுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு, பிகார் பகல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாநவாஸ் உசேன்தான், பாஜகவின் கடைசி இஸ்லாமிய மக்களவை உறுப்பினர் ஆவார்.
கடந்த 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட இஸ்லாமிய வேட்பாளர் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக சார்பாக ஏழு இஸ்லாமியர்களும் 2019ஆம் ஆண்டு ஆறு இஸ்லாமியர்களும் போட்டியிட்டனர். ஆனால், அனைவரும் தோல்வியை தழுவினர். நாடாளுமன்றத்தில்தான் இப்படி தொடர்கிறது என மாநிலங்களிலும் இதே சூழல் தான் நிலவுகிறது.
இந்திய மக்கள் தொகையில் 16 சதவிகிதமாக இஸ்லாமியர்கள் இருந்தாலும், அச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட மாநில முதலமைச்சராக இல்லை. குறிப்பிடுதகுந்த இஸ்லாமிய மக்கள் தொகை உள்ள 15 மாநிலங்களில் ஒரு இஸ்லாமியர் கூட அமைச்சர் பதவியை வகிக்கவில்லை. அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை.
இஸ்லாமிய பிரிதிநிதிகள் குறைவாக இருந்த காரணத்தால், கடந்த 2005ஆம் ஆண்டே, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.
பின்னர், சச்சார் கமிட்டி சமர்பித்த அறிக்கையில், "கடந்த அறுபது ஆண்டுகளில், சிறுபான்மையினர்களுக்கு போதுமான அரசு பதவி கிடைக்கவில்லை. ஏறக்குறைய அனைத்து அரசியல் இடங்களிலும் அவர்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு இந்திய சமூகம் மற்றும் அரசியலில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு, இதுகுறித்து நிலை அறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அதில், சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்குவங்கம், சண்டிகர் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் ஒரு இஸ்லாமிய பிரிதிநிதி கூட இல்லாத சூழல் உருவாகியிருப்பது குறித்து மேற்குவங்க எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், "ஜூலை 7 ஆம் தேதியோடு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் எம்பி கூட இல்லாத சூழல் உருவாகவுள்ளது. மேலும் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் இல்லை.
எனவே 200மில்லியன் இஸ்லாமிய மக்கள், அதாவது மக்கள் தொகையில் 15% பேருக்கு 'பெரிய அரசிய கட்சியில்' பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. உண்மையில், பாஜக "அனைத்து மதங்களையும்" மதிக்கிறது" என விமர்சித்துள்ளார்.