கொரோனாவால் இறந்தவர்களில் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் எத்தனை பேர்? - மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி
இந்த தேசியப் பேரிடர் காலத்தில் மத்திய அமைச்சகம் தற்காலிகமாகப் புகையிலை மீதான தடை விதிப்பது குறித்து யோசிக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு தொடர்பான பொதுநல மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு ’புகைப்பிடிப்பது கொரோனா பாதிப்பைத் தீவிரப்படுத்துமா? அது தொடர்பாக ஏதும் ஆய்வுகள் இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியது.
இறந்தவர்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை எடுக்கச் சொல்லி வலியுறுத்திய நீதிபதிகள்,”இந்த தேசியப் பேரிடர் காலத்தில் மத்திய அமைச்சகம் தற்காலிகமாகப் புகையிலை மீதான தடைவிதிப்பது குறித்து யோசிக்க வேண்டும். இப்படித் தடைவிதிப்பதன் மூலமாகக் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் புகைப்பிடிப்பதைக் கட்டுப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது நம்மால் காப்பாற்ற முடியும்” என வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் 2020-இல் மத்திய சுகாதார அமைச்சகமே புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்தும் அடுத்த 12 மணிநேரத்தில் நமது நுரையீரலில் உள்ள கார்பன் மோனோ ஆக்சைட் அளவு கணிசமாகக் குறைகிறது அதனால் இந்தப் பேரிடர் காலத்தில் புகைப்பிடிப்பதை தவிருங்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read : Corona LIVE Updates : திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்களுக்கு 26-ஆம் தேதி முதல் தடை