அதிகமான குழந்தைகள் பெற்றால் ஒரு லட்சம் பரிசா? அமைச்சரின் அதிரடி அறிவிப்பு ஏன்?
அதிகமாக குழந்தைகள் வைத்திருக்கும் தம்பதியினருக்கு பரிசு தொகை அளிக்க உள்ளதாக அமைச்சர் ஒருவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மக்கள் தொகை மிகவும் அதிக வேறுபாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக மற்ற பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவு. மேலும் அங்கு அதிகளவில் பழங்குடியினர் மட்டுமே வசித்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவிற்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவான ஒன்று. இந்தச் சூழலில் அப்பகுதியில் பல வெளி மாநிலத்தவர் வந்து பணிபுரிந்து வருவதாக சில குற்றச்சாட்டுகள் எழ தொடங்கின.
இந்நிலையில் மிசோரம் மாநிலத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா ரோய்டே ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவருடைய சட்டமன்ற தொகுதியில் அதிக குழந்தைகளை வைத்துள்ள தம்பதிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தந்தையர் தினத்தன்று அவர் அறிவித்தார். மேலும் இப்பரிசு தொகையை அவருடைய குடும்பம் நடத்தும் வடகிழக்கு ஆலோசனை நிறுவனம் வழங்கும் என்று அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோய்டே மிசோரத்தின் ஏஸ்வால்-கிழக்கு-II தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகி உள்ளார். அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணம் மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகைதான். ஏனென்றால் அந்த மாநிலத்தில் சராசரியாக ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் வெறும் 52 மக்களே வசித்து வருகின்றனர். இது இந்தியாவின் சராசரியான ஒரு கிலோ மீட்டருக்கு 382 மக்கள் என்பதை விட மிகவும் குறைவான ஒன்று.
வடகிழக்கு மாநிலங்களில் இதுபோன்ற அறிவிப்புகள் புதிதல்ல. இதற்கு முன்பாக அந்த மாநில மக்களைவிட வெளி மாநில மக்கள் அதிகளவில் இருப்பதை குறைக்க வேறு சில வட மாநிலங்களிலும் இதுபோன்ற அறிவிப்புகள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மேகாலயாவின் காசி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பகுதியில் 2017-ஆம் ஆண்டு அமேலியா சொஹ்டன் என்ற பெண்மணி 17 குழந்தைகளை பெற்றதற்காக 16000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் 15 குழந்தைகள் பெற்ற மற்றொரு பெண்ணிற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் மட்டும் 2 குழந்தைகள் மேல் இருந்தால் அரசாங்க வேலை இல்லை என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆகவே அங்கு தவிர மற்ற எந்த மாநிலங்களில் இந்த மாதிரியான கட்டுப்பாடு இல்லை.
மேலும் இதுபோல் அதிக குழந்தைகளுக்கு பரிசு என்ற அறிவிப்புகளை பெண் உரிமை சார்ந்த செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக இது எத்தனை குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க உரிமையை பெண்ணிடம் இருந்து பறிக்கும் ஆண் ஆதிக்க சமூகத்தின் வெளிப்பாடு என்று அவர்கள் கூறி வருகின்றனர். கடந்த 2020 டிசம்பர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் குடும்ப கட்டுப்பாடு குறித்து அரசு யாரையும் கட்டாயப்படுத்தாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும் 1994ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படியும் இந்திய அரசு தன் மக்களை குடும்ப கட்டுப்பாடு தொடர்பாக கட்டாய உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இந்தியாவின் மூன்று மாநிலங்களில் தாக்கும் ஆபத்தான டெல்டா பிளஸ் கொரோனா வகை!