IND China: ரஃபேல் விவகாராத்தில் சீனாவின் குட்டு, இந்தியாவிற்கு எதிராக பிளான்? போட்டுக் கொடுத்த ஃப்ரான்ஸ்
IND China Rafale: இந்தியா பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு ரஃபேல் விமானங்கள் குறித்து சீனா தவறான தகவல்களை பரப்பியதாக ரஃபேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

IND China Rafale: சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில், ரஃபேல் விமானங்கள் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டதாக ஃப்ரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் மோதல்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரி நாட்டின் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், இந்திய ராணுவம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தான், தங்களது ரஃபேல் போர் விமானங்களின் உலகளாவிய நற்பெயரையும், விற்பனையையும் சேதப்படுத்த சீனா திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டதை ஃப்ரான்ஸ் ராணுவம் மற்றும் உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பரபுரை சீனத் தூதரகங்கள் மற்றும் ராணுவத் தூதர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகக் தெரிகிறது. உலக நாடுகள் ரஃபேல் விமானங்களை வாங்குவதைத் தடுக்கவும், அதற்குப் பதிலாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை வாங்குவதை ஊக்குவிக்கவும் சீனா இப்படி செய்ததாக, ஃப்ரான்ஸ் உளவுத்துறையின் தகவல்களை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமபலமான சீனாவின் குட்டு:
சீன தூதரகங்களின் பாதுகாப்பு அதிகாரிகள், நடைமுறையில் இருக்கும் அல்லது சாத்தியமான ரஃபேல் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்களை தீவிரமாக வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ரஃபேல் விமான் ஏற்றுமதி பாதுகாப்புத் துறைக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாகவும், ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் மூலோபாய கருவியாகவும் மாறி வரும் நேரத்தில், குறிப்பாக இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுடன், சீனா தனது செல்வாக்கை தீவிரமாக விரிவுபடுத்தி வரும் நேரத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்ட சீனாவின் கருத்தை, ரஃபேல் ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர், திட்டவட்டமாக மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட சதி:
பாகிஸ்தான் மற்றும் அதன் நட்பு நாடான சீனாவிலிருந்து ரஃபேல் மீதான ஒருங்கிணைந்த ஆன்லைன் தாக்குதல் மற்றும் தவறான தகவல் பரப்புதல் தீவிரமாக நடந்ததாக ஃப்ரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்ததாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பரப்புரையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், ரஃபேல் விமானச் சிதைவுகளைக் காட்டும் விமானச் சிதைவுகளின் போலிப் படங்கள் மற்றும் சீனப் போர் விமானங்கள் ரஃபேல் விமானங்களை விட உயர்ந்தவை என்ற கதையைப் பரப்பும் ஏராளமான சமூக ஊடக பதிவுகளை உள்ளடக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் தாக்குதலை சீன அரசாங்கத்துடன் நேரடியாக இணைக்க முடியவில்லை என்று ஃப்ரான்ஸ் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது கணக்கீட்டின்படி, இந்த நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல, மாறாக ஃப்ரான்சின் பாதுகாப்பு ஏற்றுமதியின் முக்கிய போர் விமானத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் இரு திட்டமிட்ட சதி என்று கூறப்படுகிறது.
சீனா மறுப்பு:
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம், இந்தக் கூற்றுக்களை "ஆதாரமற்ற வதந்திகள் மற்றும் அவதூறுகள்" என்று விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், "சீனா ராணுவ ஏற்றுமதிகளில் ஒரு விவேகமான மற்றும் பொறுப்பான அணுகுமுறையை தொடர்ந்து பராமரித்து வருகிறது, பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்கிறது" என்று விளக்கியுள்ளது.
ரஃபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் 533 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளது அல்லது பெற்றுள்ளது. அவற்றில் 323 விமானங்கள் இந்தியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், கிரீஸ், குரோஷியா, செர்பியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா மட்டும் 42 ஜெட் விமானங்களுக்கு உறுதியளித்துள்ளது, மேலும் எதிர்காலத்தில் அதன் ஆர்டரை அதிகரிக்கக்கூடும்.






















