ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்.. ஹரியானா தேர்தலில் ராகுல் காந்தியின் திட்டம் என்ன?
காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா கூட்டணி உடைந்ததா?
ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து, வரும் அக்டோபர் 8ஆம் தேதி, ஹரியானா தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், பலமான கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டது.
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால், கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் தேசிய தலைவர்கள் முனைப்பு காட்டினர். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது, ஆம் ஆத்மி கட்சி சார்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் திட்டம் என்ன?
ஆனால், 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்திர சிங் ஹூடாவின் சொந்த மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கேட்டுள்ளனர்.
இரு தரப்பிலும் இதில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரியானாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தியா கூட்டணி சார்பாக ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் 9 மக்களவை தொகுதிகளில் 5 இடங்களை கைப்பற்றியது. போட்டியிட்ட ஒரே தொகுதியில் ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்தது.
கடந்த 2014 மற்றும் 2019இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 2014ஆம் ஆண்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், கடந்த முறை அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.