இல்லம் திரும்பிய போப் பிரான்சிஸ் முதல் உரை: என்ன சொன்னார் தெரியுமா?
Pope Francis: போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இல்லம் திரும்பிய பிறகு, தனது முதல் மறைக்கல்வி உரையை தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பிய நிலையில், உடல்நலன் காரணமாக பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில், தனது முதல் மறைக்கல்வி உரையை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இல்லம் திரும்பிய போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூச்சுக்குழாய் அழற்சி தொற்றுக்காக, சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு செயற்கை ஆக்சிஜன் வழங்கும் முறையானது மூக்கு வழியாக வழங்கப்பட்டது. இதையடுத்து, போப் பிரான்சிஸின் உடல் நிலை சற்று சீரான முன்னேற்றங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் 6 ஆம் தேதி , வியாழக்கிழமையன்று, தனக்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு அவர் நன்றி கூறும் ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து செயற்கை ஆக்சிஜன் முறையானது நீக்கப்பட்டது.
பின்னர், போப் பிரான்சிஸ் மார்ச் 23 ஆம் தேதி மருத்துவமனையின் பால்கனி தளத்தில் இருந்தவாறே பொதுமக்களைச் சந்தித்து ஆசீ வழங்கினார். அதனை தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்தவாறே, மருத்துவமனையில் இருந்து, சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார். அப்போது, இல்லம் திரும்புகையில் ஜெமெல்லி மருத்துவமனையின் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, சற்று மெலிதான குரலில் “அனைவருக்கும் நன்றி” என கூறி, கூடியிருந்த மக்கள் அனைவரையும் பார்த்து கையசைத்து சென்றார்.
Also Read: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏப்.1 இல்லை.! காரணம் என்ன?
Also Read: ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
முதல் மறைக்கல்வி உரை:
இந்நிலையில், தற்போது மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருத்துவ சிக்கிசைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டு வருகின்றார். இந்நிலையில், போப் உடல் நலம் கருதி, அவரது தனிப்பட்ட மற்றும் பொதுச்சந்திப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தனது உரைக்கருத்துக்களை எழுத்துப்படிவமாக தெரிவித்துள்ளார்.
“இயேசுவின் வாழ்வும் சந்திப்புக்களும்” என்ற தலைப்பில் இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்த நிகழ்வு குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். நாம் இன்று இயேசு நம்மைச் சந்திக்க நமக்காகக் காத்திருந்த நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்க இருக்கின்றோம். நமது வாழ்வில் அவர் நம்மைச் சந்திக்க காத்துக்கொண்டிருக்கின்றார். நம்மை ஆச்சரியப்படுத்தும் இயேசுவுடனான சந்திப்புகளில், நாம் எப்படி விவேகத்துடன் இருக்க வேண்டும் எனவும், நம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் நாம் முயற்சிக்கவேண்டும்.
நண்பகலில் கிணற்று ஓரமாய் ஒரு மனிதரைச் சந்திப்போம் என்று சமாரியப்பெண் எதிர்பார்க்கவில்லை. உண்மையில், யாரையுமே பார்க்க மாட்டோம் என்று அந்த பெண் நினைத்துக் கொண்டிருந்தார்.வெப்பம் மிகுந்த நண்பகல் வேளையில், அதாவது யாரும் வெளிவராத நேரத்தில், கிணற்றில் தண்ணீர் எடுக்கச் செல்கிறார். பிறரால் கண்டனம் செய்யப்பட்ட அப்பெண் அதன் காரணமாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றார். அனைவருடனான தன்னுடைய உறவுகளை முறித்துக் கொள்கிறார்.
சமாரியா செல்ல விரும்பி கிணற்று ஓரத்தில், அந்த நண்பல் வேளையில் நிற்கிறார். பிறரால் அன்பு செய்யப்பட வேண்டும் என்ற சமாரியப் பெண்ணின் விருப்பதிற்கான உண்மையான பதிலை எங்கு தேட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு அவருக்கு உதவ விரும்புகிறார். “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கூறி இயேசுவே முதலில் தனது விருப்பத்தை எடுத்துரைக்கின்றார். இதன்வழியாக உரையாடலைத் துவக்குகின்றார், தாகத்தோடு காத்திருக்கும் நபராக, பலவீனமானவராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிரில் இருக்கும் நபரை அச்சமின்றி அவரது நிலையிலேயே இருக்க வைக்கின்றார்.
எப்போதும் ஒரு வாய்ப்பு உள்ளது
இதை தொடர்ந்து, முழுமையான கதைகளை கூறிவிட்டு, அன்புள்ள சகோதர சகோதரிகளே, எதிர்நோக்கை ஒருபோதும் இழக்காதிருப்போம். நமது வாழ்க்கைக் கதைகள் சுமையானதாகவும், சிக்கலானதாகவும், பாழடைந்தது போனது போன்று காணப்பட்டாலும், அதைக் கடவுளிடம் ஒப்படைப்போம். நம் வாழ்க்கைப் பயணத்தை புதிதாகத் தொடங்கக்,நமக்கு எப்போதும் ஒரு வாய்ப்பு உள்ளது. கடவுள் இரக்கமுள்ளவர். அவர் எப்போதும் நமக்காகக் காத்திருக்கிறார் என இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.




















