Shylaja Teacher | கேரள அரசின் புதிய கேபினெட்டில் ஷைலஜா டீச்சர் இடம்பெறாதது ஏன்?
முந்தைய ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், புதிய அமைச்சர்களை கொண்டு அமைய இருக்கும் புதிய ஆட்சியும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலஜா டீச்சரின் வெற்றிடமும் பினராயி விஜயனுக்கு சற்று கூடுதல் சவாலானதாக இருக்கும் என்றே தெரிகிறது.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் அங்கு மீண்டும் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. பதவியேற்பு நிகழ்சியானது வருகிற வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 21 அமைச்சர்களுடன் அமையவுள்ள புதிய ஆட்சியில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில் , கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே. சைலஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் சுகாதரத்துறையிலேயே வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அவர் மீண்டும் அமைச்சராக வாய்ப்புகள் இல்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சைலஜா டீச்சர் மக்களிடையே அதீத செல்வாக்கு பெற்றவர். கேரளா பேரிடர் தருணங்களில் களத்தில் இறங்கி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றியவர். பினராயி விஜயனுக்கு அடுத்தபடியாக மக்களால் கொண்டாடப்படுபவர் சைலஜா டீச்சர். சட்டமன்ற தேர்தலில் மட்டண்ணூர் தொகுதியில் போட்டியிட்ட சைலஜா டீச்சர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இப்போது அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2016 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த சைலஜா டீச்சர், கேரள அரசின் சுகாதாரத்துறை மற்றும் சமூகநலத்துறை என இரண்டு மிகமுக்கியமான இலாக்காக்களை கவனித்து வந்தார். கேரள வெள்ளம், ஒக்கி புயல்,கொரோனா போன்ற கடினமான சூழலிலும் கூட சேவை மனப்பான்மையோடு திறமையாக, தைரியமாக செயல்பட்டவர் சைலஜா கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரும் பெண் ஆளுமையாக உருவெடுத்து வந்தவர். பினராயி விஜயனை தவிற ,கடந்த ஆட்சியில் இருந்த யாருக்கும் , இம்முறை பதவிகள் வழங்கப்படாது என கட்சி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில் , சி.பி.எம் கட்சிக்கு 12 அமைச்சர்களும், சி.பி.ஐ-க்கு 4 அமைச்சர்களும், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி, ஜனதாதள் எஸ், ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு அமைச்சர் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. . மீதம் உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் வழங்கப்படும் என தெரிகிறது. பதவியேற்க உள்ள 21 அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பதவிகள் குறித்த ஆலோசனையில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளதாக தெரிகிறது.
முந்தைய ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், புதிய அமைச்சர்களை கொண்டு அமைய இருக்கும் புதிய ஆட்சியும், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சைலஜா டீச்சரின் வெற்றிடமும் பினராயி விஜயனுக்கு சற்று கூடுதல் சவாலானதாக இருக்கும் என்றே தெரிகிறது.