K K Shailaja : 'ஆசியாவின் நோபல் பரிசு' - விருதை புறக்கணித்த கேரள முன்னாள் அமைச்சர் சைலஜா ! காரணம் இதுதான்!
”அவர் பெயரில் வழங்கப்படும் விருதை பெற நான் விரும்பவில்லை. ஆனால் எனக்கு வழங்கியமைக்கு நன்றி ”
விருதை புறக்கணித்த சைலஜா :
பொதுசேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்னும் அடிப்படையில் வழங்கப்படும் விருது மகசேசே. இந்த விருது மறைந்த ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் , கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சைலஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் விருதை இந்த விருது தனக்கு பொருத்தமற்றது என கூறி சைலஜா விருதை புறக்கணித்துள்ளார்.
காரணம் என்ன ?
இது குறித்து பேசிய அவர் “ கேரள சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியது ஒன்றும் தனிப்பட்ட சாதனை அல்ல; அது ஒரு கூட்டு முயற்சி..அது தவிர பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர். விருது வழங்கும் அறக்கட்டளையும் அப்படியாகத்தான் செயல்படுகிறது. அவர் பெயரில் வழங்கப்படும் விருதை பெற நான் விரும்பவில்லை. ஆனால் எனக்கு வழங்கியமைக்கு நன்றி ” என தெரிவித்துள்ளார். மகசேசே விருது என்பது நோபல் பரிசுக்கு இணையான ஒரு விருது. இதனை ஆசியாவின் நோபல் பரிசு என்றே அழைக்கின்றனர். இந்த விருதினை அமைச்சர் சைலஜா புறக்கணித்திருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர் :
ஃபிலிப்பைன்ஸில் கடந்த 1950 ஆம் ஆண்டு அதிபராக பதிவி வகித்தவர் மகசேசே . அந்த காலக்கட்டத்தில் அரசுக்கு எதிராக ஒன்று திரண்ட விவசாயிகள் கூட்டம் கம்யூனிஸ்ட் சித்தாந்த்தை முன்னெடுத்து கொரில்லா கூட்டத்தை உருவாக்கியிருந்தது. இதனை எதிர்த்த அதிபர் மகசேசே , அவர்களின் மீது தாக்குதல் நடத்தினார். மகசேசே எப்போதுமே கம்யூனிஸ்ட்களுக்கு எதிரானவராக இருந்திருக்கிறார்.பின்னர் 1957 ஆம் ஆண்டு விமான விபத்தில் ஒன்றில் சிக்கிச மகசேசே எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரின் நினைவாகத்தான் ராக்ஃபெல்லர் பிரதர்ஸ் பேண்ட் என்னும் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு, அவரது நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக அமைச்சர் சைலஜா அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு அதிகாரிகளிடம் இது குறித்து கலந்து ஆலோசித்த சைலஜா, இந்த விருதை மறுப்பது என முடிவெடுத்திருக்கிறார். இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சோரி , ”இந்த விருது வழங்கப்படும் முதல் பெண் அரசியல்வாதி சைலஜாதான். ஆனால் மகசேசே கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அடக்குமுறையில் ஆட்சி செய்ததால் அவரின் விருதை வாங்க சைலஜா மறுத்திருக்கிறார் “ என்றார்.