Special Train: நெருங்கும் தீபாவளி: நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் - எந்தெந்த வழித்தடத்தில்? குஷியில் பயணிகள்
தீபாவளி, சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Special Train: தீபாவளி, சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலம்:
அக்டோபர் மாதம் தொடங்கினாலே பண்டிகை காலம் தான். ஆயுதபூஜை, நவராத்திரி கொண்டாட்டம், தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் தான். பொங்கல் வரை இந்த பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் தொடரும். இதனால், சொந்த ஊர்களுக்கு மக்கள் அடிக்கடி பயணம் செய்து வருவது வழக்கம். இதனால், ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், பயணிகளின் சிரமத்தை போக்க நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, தீபாவளி, சாத் பூஜையை முன்னிட்டு 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பு பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
283 சிறப்பு ரயில்கள்:
டெல்லி-பாட்னா, டெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, டானாபூர்-சஹர்சா, தானாபூர்-பெங்களூரு, அம்பாலா-சஹர்சா, முசாபர்பூர்-யஸ்வந்த்பூர், பூரி-பாட்னா, ஓகா -நஹர்லாகுன், சீல்டா-நியூ ஜல்பைகுரி, கொச்சுவேலி-பெங்களூரு, பெனாரஸ்-மும்பை, ஹவுரா-ரக்சால் போன்ற இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 282 சிறப்பு ரயில்களில் 4,480 பயணங்கள் மேற்கொள்ள உள்ளது. பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் ஆர்பிஎஃப் அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். ரயில்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் அவசரகாலப் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடைமேடையில் ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் குறித்து அடிக்கடி அறிவிக்கப்படும். மேலும், முக்கியமான ரயில் நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் உள்ளன. காத்திருப்பு கூடங்கள், ஓய்வு அறைகள், நடைமேடைகள் தூய்மையாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,480 பயணங்கள்:
சிறப்பு ரயில்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 283 ரயில்களில் தென் மத்திய ரயில்வேக்கு 58 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை 404 ட்ரிப்கள் பயணிக்கும். அதேபோல, மேற்கு ரயில்வே நிர்வாகம் 36 சிறப்பு ரயில்கள் மூலம் 1,267 ட்ரிப்களை அடிக்க உள்ளது.
வடமேற்கு ரயில்வே நிர்வாகம் 24 சிறப்பு ரயில்கள் மூலம் 1,208 ட்ரிப்களை அடிக்க உள்ளது. வடக்கு ரயில்வே 34 சிறப்பு ரயில்கள் மூலம் 228 ட்ரிப்கள் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை 10 சிறப்பு ரயில்கள் மூலம் 58 ட்ரிப்களை அடிக்கும். தென்கிழக்கு ரயில்வே 8 சிறப்பு ரயில்கள் மூலம் 64 ட்ரிப்களும், தென்மேற்கு ரயில்வே 11 சிறப்பு ரயில்கள் மூலம் 27 ட்ரிப்களும் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.