COVID-19 Vaccine: 220 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியது இந்தியா.. புது மைல்கல்
நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 கோடியைத் தாண்டியதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்தியாவில் 16 ஜனவரி 2021 அன்று தொடங்கிய கோவிட் தடுப்பூசி பிரச்சாரம் இன்று மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 கோடியைத் தாண்டியதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். ”தடுப்பூசி பிரச்சாரம்: தேசத்தின் திறன் மற்றும் திறனுக்கான சான்று. நாடு இன்று 220 கோடி தடுப்பூசி அளவைக் கடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
#COVID19 | India crosses the milestone of 220 Crore vaccine doses, tweets Union Health Minister Mansukh Mandaviya. pic.twitter.com/fluWG9CGAW
— ANI (@ANI) December 19, 2022
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, திங்கள்கிழமை காலை 8:00 மணி நிலவரப்படி மொத்தம் 2,20,00,44,678 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 3,559. கோவிட்-19ல் இருந்து குணமடைந்து 4,41,41,854 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 18 அன்று, மொத்தம் 61,701 கோவிட்-19 சோதனைகள் செய்யப்ட்டடன. முன்னதாக, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் அவதிப்பட்டு வந்த உலகம் தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. முதன்முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் சீன மக்கள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தினசரி பாதிப்பு சுமார் 30,000 கடந்து பதிவாகியுள்ளது. சீன அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வந்தனர். ஷாங்காயில் போலீசுக்கு எதிராக மக்கள் போராடி வந்த நிலையில், பிஜீங் நகரத்திலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குவாங்டங், செங்ஷோ, லாசா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் வலுக்கும் நிலையில் சீன அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
இது ஒரு புறமிருக்க முக்கிய சீன நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தடுப்பூசியால் வரும் பக்க விளைவுகளை சந்திக்க தயாராக இல்லை என்றும் கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். குறிப்பாக மூத்த குடிமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சமூக வளைத்தளங்களில் பலரும் தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் மக்களின் போராட்டம் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் தளர்த்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றி இது போன்ற கருத்துக்களால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.